நூறு கோடி வானவில் விமர்சனம்: பழைய காதல் கதையின் புதிய பயணம்!

ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி நடிப்பில், இரண்டாவது காதல் மற்றும் வாழ்க்கையின் இன்னொரு வாய்ப்பைப் பேசும் இயக்குநர் சசியின் நூறு கோடி வானவில்!

தமிழ் சினிமாவில் காதல் கதைகளைத் தனக்கே உரிய பாணியில் சொல்லக்கூடிய இயக்குநர்களில் ஒருவர் சசி. அவருடைய ஒவ்வொரு படத்திலும் காதலை அணுகும் விதத்திலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில், ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் நூறு கோடி வானவில்.

பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்தப் படம் தற்போது Zee5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது.

காதலன் கோமா நிலைக்குச் சென்ற பிறகும் அவனுக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணும், அவளுடன் பயணிக்கும்போது காதலில் விழும் ஒரு இளைஞனும் எதிர்கொள்ளும் உணர்வுப் போராட்டங்கள்தான் படத்தின் கதை. பழைய காதலை மறக்க முடியாத நிலை, புதிய காதலை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை என இரண்டாவது காதலையும், வாழ்க்கையில் கிடைக்கும் இன்னொரு வாய்ப்பின் முக்கியத்துவத்தையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சசி.

திருநங்கையின் காதல் உள்ளிட்ட சில வித்தியாசமான விஷயங்களையும் படத்தில் இணைத்திருக்கிறார். வழக்கம்போல சசியின் படங்களில் இருக்கும் மெச்சூரிட்டி சில காட்சிகளிலும் வசனங்களிலும் வெளிப்படுகிறது.

ஆனால், படம் பார்க்கும்போது பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற உணர்வு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. காட்சியமைப்பு, தொழில்நுட்பம், திரைக்கதை என அனைத்திலும் பழைய பாணி தெரிகிறது. குறிப்பாக முதல் பாதியில் எந்தப் புதுமையும் இல்லாமல், பெரிய சுவாரஸ்யமின்றி கதை நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி ஓரளவுக்குப் பரவாயில்லை.

ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி இருவரும்தான் படத்தின் முக்கியமான பலம். நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், இவர்கள் இருவருடைய நடிப்புதான் மனதில் நிற்கிறது. ஹரிஷ் கல்யாண் தனது கதாபாத்திரத்தை அழகாகச் செய்திருக்கிறார். சித்தி இத்னானிக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக இருக்கும்.

சித்து குமாரின் இசை பெரிதாகக் கவரவில்லை. அதேநேரத்தில், ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார் கோவாவை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவாவில் நடப்பதால் அந்த இடங்களின் அழகு படத்துக்குப் புத்துணர்ச்சி கொடுக்கிறது.

கிளைமாக்ஸ் கூட பல வருடங்களுக்கு முன்பு வெளியான காதல் கோட்டை, காதல் நிம்மதி, ரோஜா கூட்டம் போன்ற காதல் படங்களின் முடிவுகளை நினைவுபடுத்துகிறது. அந்தக் காலகட்டத்தில் ரசிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த மாதிரியான முடிவு இன்றைய ரசிகர்களுக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும் என்பது கேள்விக்குறிதான்.

மொத்தத்தில், சசியின் வழக்கமான காதல் திரைப்படங்களை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம். ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானியின் நடிப்புக்காகவும், கோவாவின் அழகுக்காகவும் ஓடிடியில் ஒருமுறை பார்க்கக்கூடிய திரைப்படம் நூறு கோடி வானவில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *