ராவணனின் அறிமுகத்தில் தொடங்கி, பாகுபலி பாணியிலான கமர்ஷியல் அனுபவத்தைக் கொடுக்கும் ராமாயணம்!
பலமுறை திரைப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வந்த கதை என்பதால் ராமாயணம் படத்தின் மீது ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதிலும் டீசர் வெளியானபோது சிஜி காட்சிகள் குறித்த விமர்சனங்கள் வேறு. ஆனால், திரையரங்கில் படம் பார்க்கும்போது அந்தச் சந்தேகங்களை எல்லாம் மறக்கடிக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் முக்கியமான பலம் திரைக்கதை. வழக்கமாக ராமரை மையப்படுத்தி சொல்லப்படும் கதையை, முதலில் ராவணனின் பின்னணியிலிருந்து ஆரம்பித்து அவனுடைய பலத்தையும் ஆளுமையையும் காட்டிவிட்டுப் பிறகு ராமரை அறிமுகப்படுத்துகிறார்கள். லட்சுமணன், சீதா என கதாபாத்திரங்களின் அறிமுகமும் ஒரு கமர்ஷியல் படத்துக்கான பாணியில் அமைந்திருக்கிறது.
ராமாயணக் கதை தெரியாதவர்கள்கூட ஒரு பிரம்மாண்டமான பாகுபலி படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பெறும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. தேவையில்லாத காட்சிகளைத் தவிர்த்து, கதைக்கு முக்கியமான சம்பவங்களை மட்டும் வேகமாகக் கடந்து செல்வது சிறப்பு. முதல் பாகம் என்பதால் சீதையைக் கடத்திச் செல்லும் சம்பவத்தோடு படத்தை முடித்திருக்கிறார்கள்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான யுத்தத்துடன் தொடங்கும் முதல் காட்சியே நம்மை அந்தப் பிரம்மாண்டமான உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் விஷுவல் எஃபெக்ட்ஸ், 3D, சிஜி என தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு தெரிகிறது.
தமிழ் வசனங்களும், கதாபாத்திரங்களின் உதட்டு அசைவுகளும் மிகச் சிறப்பாகப் பொருந்தியிருக்கின்றன. AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் வசனங்களுக்கு ஏற்ப லிப் சிங்க் மாற்றப்பட்டிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். பொதுவாக டப்பிங் படங்களில் ஏற்படும் அந்தச் சிறிய உறுத்தல் இதில் பெரிதாக இல்லை.
சுமார் மூன்றே கால் மணி நேரம் ஓடினாலும் சலிப்பு ஏற்படவில்லை. ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் நிதேஷ் திவாரியின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
ஒரு சிறிய குறை, நான் பார்த்த PVR திரையரங்கில் சவுண்ட் மிக்ஸிங் சரியாக இல்லை. குறிப்பாக Dolby Surround அனுபவம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் நல்ல சவுண்ட் சிஸ்டம் கொண்ட திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்ப்பது நல்லது.
மொத்தத்தில், பழக்கமான ராமாயணக் கதையைப் புதிய தலைமுறைக்கான பிரம்மாண்டமான கமர்ஷியல் சினிமாவாக மாற்றியிருக்கிறார்கள். விஷுவல் அனுபவத்துக்காகவும், குடும்பத்துடன் ரசிப்பதற்காகவும் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்!

