‘சிங்காரம்’ திரைப்பட விமர்சனம் !!

யோகிபாபு நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படம், நரிக்குறவர் சமூக மக்களின் வாழ்வியலையும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்புகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஊர் ஊராகச் சென்று ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்து வாழ்க்கை நடத்தும் சிங்காரத்தின் குடும்பம் பல்வேறு அவமானங்களையும் நெருக்கடிகளையும் சந்திக்கிறது. அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒன்றரை கோடி ரூபாய் லாட்டரிப் பரிசு கிடைக்கிறது.

இதையடுத்து பொருளாதார ரீதியாக முன்னேறும் சிங்காரம், தனது சமூக மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் அவலங்களையும் உரிமைப் பிரச்சினைகளையும் உணர்ந்து அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில் அரசியல் களத்தில் இறங்கும் அவர், தனது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினாரா என்பதே படத்தின் மையக்கதை.

வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருக்கும் யோகிபாபு கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக அவரது தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கிறார். வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.

இயக்குநர் கே.வி.கதிர்வேலு நரிக்குறவர் மக்களின் வாழ்வியல், அடிப்படை உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் ஆகியவற்றை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசையும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன.

சமூக அக்கறை கொண்ட வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். மொத்தத்தில், சமூகச் சிந்தனையை முன்வைக்கும் திரைப்படம் – சிங்காரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *