‘செய் செய்யாதே’ – திரைப்பட விமர்சனம்!

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், பொழுதுபோக்குடன் சேர்த்து சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளையும் தாங்கி வெளியாகியுள்ளது.

கதைக்களம்:
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் டீனாக இருக்கும் டாக்டர் ராஜா (இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா), மருத்துவத்தை சேவையாகப் பார்ப்பவர். ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து பல உயிர்களை காக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தில் அவரது மனைவியோ மருத்துவத்தை தொழிலாகப் பார்த்து சொந்தமாகத் தனியார் மருத்துவமனை கட்டி லாப நோக்கில் மட்டுமே செயல்படுகிறார். மருத்துவம் படிக்கும் இவர்களின் மகனும் அம்மாவை போலவே மருத்துவத்தை பணமாக மட்டுமே பார்க்கிறான். இன்னொரு புறம் ஃபார்மா மாஃபியாக்கள் பணத்திற்காக மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த அநீதிகளை டாக்டர் ராஜா எப்படி முறியடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

டாக்டர் எஸ். ராஜா, மருத்துவராக இருந்தவர் கலையின் மீதான ஆர்வத்தால் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் இயக்கம் எனப் பல துறைகளை கையாண்டு ஒரு அவசியமான படத்தைத் தந்துள்ளார். மருத்துவத்தின் மகத்துவம், மருத்துவர்கள் எப்படி சேவையாற்ற வேண்டும், மருத்துத்தை வெறும் தொழிலாக பார்க்காமல் சேவையாக பார்க்க வேண்டும் போன்ற பல முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார். போதைப்பொருள் கலாச்சாரம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றையும் கதையினுள் அழகாக பேசியிருக்கிறார்.

H.ராஜா முக்கியமான ஒரு இடத்தில் கதையின் போக்கை மாற்றும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். நடிகராக அவரை திரையில் பார்த்ததே ஆச்சர்யம் தான். டாக்டர் எஸ். ராஜா கதையின் நாயகனாக, மருத்துவராகவும், ஒரு தந்தையாகவும் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். நிஜத்திலேயே மருத்துவர் என்பதால் மருத்துவத் தகவல்களை அவர் சொல்லும்போது நம்பகத் தன்மை மேலும் கூடுகிறது.

குரு விஜய் & தர்ஷினி ரெட்டி இளம் காதல் ஜோடியாக முதல் பாதி முழுக்க காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்கள். இரண்டாம் பாதியில் குரு விஜய் எடுக்கும் ரூட் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது திறமையான நடிப்பும் அதற்கு வலு சேர்த்திருக்கிறது. தர்ஷினி ரெட்டி இவருக்குச் சரியான ஜோடியாகப் பொருந்துகிறார். தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி, குழந்தை நட்சத்திரம் பிரதீக்ஷா மனோ பிரசாந்த் உட்பட மற்ற நடிகர்கள் எல்லாருமே புதிது என்பதால் கொஞ்சம் தடுமாற்றம் தெரிகிறது.

டாக்டர் ராஜா மற்றும் ஹரிணி சுப்பு குழுவினறின் பின்னணி இசை ஓகே ரகம். தமிழ் படமானாலும் ஆங்கிலப் பாடல்களையும் படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் வாசு ராம்நாத் மதுரையின் முக்கிய இடங்களை மிக அழகாக நேர்த்தியாக படம் பிடித்தியிருக்கிறார். ஆனாலும் சில காட்சிகள் மொபைல் ஃபோனில் எடுத்தது அப்பட்டமாகத் தெரிகிறது. படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் மருத்துவம் சார்ந்த ஒரு நல்ல விழிப்புணர்வு படமாகவே அமைந்திருக்கிறது, குறைகளை கடந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *