Retro Movie Review

0
217

இயக்குனர் – கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் – சூர்யா , பூஜா ஹெட்கே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர்
இசை – சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு – 2D எண்டர்டெயின்மெண்ட் – ஜோதிகா, சூர்யா

சட்டவிரோத செயல்களை செய்யும் ஒருவன் எதிர்பாராத ஒரு சம்பவத்தினால் ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்த்து வருகிறான், இந்நிலையில் தனது காதலிக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறார். ஆனால், அதே காதலிக்காக தனது வளர்ப்பு அப்பாவின் கையை துண்டாக வெட்டுபவர், அவரது ஆட்களையும் கொலை செய்கிறார். இதனால், அவரிடம் இருந்து அந்தப்பெண் விலகிச்செல்ல, நாயகனும் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். சில ஆண்டுகளுக்கு பின் அந்தப் பெண் அந்தமானில் இருக்கும் தகவல் தெரிய வருகிறது. அவரை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் நாயகனுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அவரது வாழ்க்கை என்னவானது?, என்பதை மாஸாகவும், கிளாஸாகவும் சொல்வதே ‘ரெட்ரோ’.

வளர்ப்பு அப்பா என்றாலும், அவருக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் அரக்கனாகி, பிறகு ஒரு இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளி, என ஒரே கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பு மூலம் பல முகங்கள் கொடுத்திருக்கிறார் சூர்யா. முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கும் சூர்யா, சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று பார்வையாளர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார். குறிப்பாக சிரிக்க தெரியாது போன்ற காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார், நீண்ட நாட்களுக்கு பின் நடிகர் சூர்யாவை இந்தப் படத்தில் காணலாம்,

நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் கருப்பொருளாக இருந்தாலும், திரைக்கதையில் தனித்துவம் இல்லாமல் வழக்கமான நாயகியைப் போல் பயணித்திருக்கிறார். இருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார். கிங் மைக்கலாக நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தாலும், காட்சிகளுடன் பார்க்கும் போது கூடுதல் ஸ்பெஷலாக இருக்கிறது. பின்னணி இசை மற்றும் பீஜியம்கள் பார்வையாளர்களையும் ரெட்ரோ காலக்கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் கேமரா, சூர்ய, பூஜா ஹெக்டே உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளையும் ரெட்ரோ காலத்து மனிதர்களாக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை மிக ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறது.

ரெட்ரோ காலக்கட்ட உலகை நம் கண் முன் நிறுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அக்காலத்து மாஸ் ஆக்‌ஷன் படத்தை தற்போதைய காலக்கட்ட மேக்கிங் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார். அம்மா செண்டிமெண்ட், கல்ட் சண்டைக்காட்சிகள், வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவை ஒரு பக்கம் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்கிறது. மறுபக்கம் இவை அனைத்தையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கும் சூர்யா, படம் முழுவதும் ரெட்ரோ ஸ்டைலில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார். குறிப்பாக மைதான சண்டைக்காட்சி நன்றாக இருந்தது

மொத்தத்தில், இந்த ‘ரெட்ரோ’ சூர்யாவின் கம் பேக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here