இயக்குனர் – பிரித்விராஜ் சுகுமாரன்
நடிகர்கள் – மோகன்லால் , பிரித்விராஜ் , மஞ்சு வாரியர் , டோவினோ தாமஸ் , சுராஜ்
இசை – தீபக் தேவ்
தயாரிப்பு – ஆசீர்வாத் சினிமாஸ், கோகுலம் , லைகா பிக்சர்ஸ்
கேரளாவில் முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் நாயகன் , முதல்வரின் மற்றொறு மகனை புதிய முதல்வராக்கிவிட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ முடிவடையும். அதன் தொடர்ச்சியான இதில், மோகன்லால் மூலம் முதல்வரானவர் மதத்தை வைத்து அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம் ஏற்படுவதோடு, மாநிலத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனால், மீண்டும் கேரளா வரும் நாயகன் தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதையும், அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் விரிவாக சொல்வது தான் இந்த ‘எல்2 : எம்புரான்’.
முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இந்த இரண்டாம் பாகத்தில் தேசிய அரசியலுடன், கேரளா போன்ற மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடும் தேசிய கட்சிகளின் நடவடிக்கை மற்றும் மத அரசியலின் பாதிப்புகள் பற்றி பேசியிருப்பதோடு, அதை பான் இந்தியா ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் மிக பிரமாண்டமாகவும், ஸ்டைலிஷாகவும் கையாண்டிருக்கிறார்.
குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லாலுக்கு பெரிய அளவில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், படம் முழுவதும் ஸ்டைலிஷாகவும், மாஸாகவும் வலம் வருகிறார். முதல் பாகத்தில் மோகன்லாலின் சேவகனாக ஒருசில சண்டைக்காட்சிகளில் எண்ட்ரிக்கொடுக்கும் பிரித்விராஜ் சுகுமார், சையத் மசூத் என்ற கதாபாத்திரம் மூலம் அழுத்தமான கதை ஒன்றை அமைத்து, அதன் மூலம் தனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய செய்திருக்கிறார்.
மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசை மாஸான காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்தாலும், சில இடங்களில் அதிக்கப்படியான சத்தத்துடன் வழகமான மசாலா படங்களை நினைவூட்டும் வகையிலும் பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், ஒவ்வொரு ஃபிரேம்களையும் பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வெளிநாட்டு காட்சிகளை கையாண்ட விதம் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தோடு தொடங்கும் கதையை, ‘லூசிஃபர்’-ன் தொடர்ச்சியாக கையாண்ட விதம், மோகன்லாலின் நிழல் உலகத்தையும், அதன் நடவடிக்கைகளையும் காட்சிப்படுத்திய விதம் மற்றும் கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என படம் முழுவதையும் மிக பிரமாண்டமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், தற்போதைய கேரள அரசியல் மற்றும் தேசிய அரசியலையும், மத பிரச்சனைகளையும் மிக சாமர்த்தியமாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார். படத்தின் செலவுகள் அனைத்தும் காட்சிகளில் தெரிவது போல் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருந்தாலும், உள்ளூர் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக வழக்கமான ஹிரோயிஷ சண்டைக்காட்சிகளை வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா கதையாகவும், சர்வதேச தரத்திலும் சொல்ல முயற்சித்தி அதில் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமார் வெற்றி பெற்றிருக்கிறது,
மொத்தத்தில், ‘எல்2: எம்புரான்’ மலையாள சினிமாவின் ஒரு மயில் கல்.