வீர தீர சூரன் பாகம் 2 – விமர்சனம்

0
115

இயக்குனர் – அருண் குமார்
நடிகர்கள் – விக்ரம் , எஸ் ஜே சூர்யா, சுராஜ், துஷாரா
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – ரியா ஷிபு- ஹெச் ஆர் பிக்சர்ஸ்

வழக்கமாக முதல் பாகம் வெளியான பின்னரே இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், வீர தீர சூரனை பொறுத்தவரை புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இதனாலேயே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை காரணமாக வைத்து அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் புருத்விராஜ் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சர்மூடுவை என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா திட்டம் போடுகிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிப்பதற்காக, மளிகை கடை நடத்தி வரும் விக்ரமின் உதவியை புருத்விராஜ் நாடுகிறார். அனைத்தையும் விட்டுவிட்டு குடும்பம், பிள்ளைகள் என வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம் முதலில் மறுத்தாலும், குடும்பத்தை காரணம் காட்டி மிரட்டுவதால் அவர்களை காப்பாற்ற சம்மதித்து களத்தில் இறங்குகிறார். இந்த பிரச்சனைய அசத்தலனான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் சொல்வதே ‘வீர தீர சூரன் – பாகம் 2’.

பெரியவர் குடும்பத்து பிரச்சனையோடு தொடங்கும் படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்கள் கதையோடு ஒன்று விடுவார்கள், மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளும் இறுதி வரை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.

மனைவி, பிள்ளைகள் என்று குடும்பஸ்தனாக அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம், குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நிலையை வெளிக்காட்டிய விதம், பயம், கோபம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் அசால்டாக வெளிப்படுத்தி இருக்கிறார்

விக்ரமின் மனைவியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், பயம் கலந்த தனது தவிப்போடு, தப்பிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை பதற்றத்துடன் வெளிப்படுத்துவது, என நடிப்பில் அசத்தியுள்ளார்

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

மகனை காப்பாற்றுவதற்காக போராடும் புருத்விராஜ், போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, இவர்களது குடும்ப பெண்கள் என அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகரும் கதையை திசைதிருப்பாமல் பயணிப்பதோடு, பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்திவிடுகிறார். விக்ரமை காட்டும் போதும் வரும் பீஜியம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளின் பின்னணி இசை படம் முடிந்த பிறகும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இரவுக் காட்சிகளில் கையாண்டிருக்கும் லைட்டிங் பிரமிக்க வைக்கிறது. ஒரு இரவில் பல சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை மிக நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பார்வையாளர்கள் கவனிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே

சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக இருப்பதோடு ரியலாக இருக்கிறது. அதிலும், இறுதிக் காட்சியில் நடக்கும் பயங்கரமான சம்பவத்தை வெறும் சண்டைக்காட்சியாக மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் கோபம் மற்றும் வெறுப்பையும் வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார்.

ஒரு இரவில் நடக்கும் சம்பவம், பல்வேறு கதாபாத்திரங்கள், அவர்களது மாற்றம், அவர்களிடையே பயணிக்கும் சூழ்ச்சி பகை ஆகியவற்றை வைத்துக்கொண்டு முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் படத்தை நகர்த்திச் செல்லும் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார், திலீப் என்ற கதாபாத்திரத்தை காட்டாமலேயே அந்த கதாபாத்திரம் யார்? என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்திவிடுகிறார்.

காளி யார்? என்ற பிளாஷ்பேக் மற்றும் காளியின் அந்த அசத்தல் சம்பவம் மற்றும் காளியின் அதிரடி சண்டைக்காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் அம்சங்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இல்லாத துப்பாக்கி கலாச்சாரம், திரைக்கதையோடு ஒட்ட மறுப்பதோடு, பான் இந்தியா அம்சத்திற்காக திணிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆக்‌ஷன் கமர்ஷியல் படம் என்றாலும், எதையும் மிகப்படுத்தி சொல்லாமல், அதே சமயம் திரைக்கதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார், மாஸ் கமர்ஷியல் படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘வீர தீர சூரன் – பாகம் 2’ மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here