சாய் பல்லவி நடித்தாலே அது நிச்சயம் நல்ல சினிமாவாக தான் இருக்கும் என்ற எண்ணம் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது. அப்படி அவர் நடித்த எல்லா தமிழ் படங்களுமே மிகப்பெரிய தாக்கத்தை அல்லது வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் அவர் நடித்திருக்கும் சமீபத்திய தெலுங்கு படம் “தண்டேல்”. நாக சைதன்யா நாயகனாக நடிக்க, சந்து மாண்டேட்டி இயக்கியிருக்கிறார்.
இந்த படம் ஆந்திராவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மீனவர் வாழ்வின் கண்ணீர்க் கதை. மீனவரான நாக சைதன்யாவும், அதே ஊரைச் சேர்ந்த சாய் பல்லவியும் சிறு வயது முதலே நெருங்கிப் பழகி காதலித்து வருகின்றனர். அப்பகுதி மீனவர்கள் குஜராத் அருகே உள்ள அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். நடுக்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதால் அவர்கள் திரும்பி வர சில மாதங்கள் ஆகும். இதனால் நாக சைதன்யாவை இனி கடலுக்கு செல்ல வேண்டாம் என சாய் பல்லவி எச்சரிக்கிறார். என் பேச்சை மீறி சென்றால் நமது காதல் நிலைக்காது என்கிறார். ஆனால் ஊர் மக்களுக்காக, தன்னை நம்பி உள்ள மீனவர்களுக்காகவும் கடலுக்குள் செல்கிறார் நாக சைதன்யா. படகு கடும் புயலில் சிக்கி, எல்லை தாண்டி, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறது. அங்கு அந்நாட்டு பாகிஸ்தான் கடற்படையினரால் நாக சைதன்யாவும் மற்றும் சிலரும் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் இருந்து நாக சைதன்யா வெளியே வந்தாரா? அங்கு அவர் எப்படி நடத்தப்பட்டார்? என்பதே மீதிக்கதை.
மீனவர் ராஜூவாகவே நாக சைதன்யா, மிகச்சிறந்த நடிப்பு. மீனவர்களை ஒரு தலைவனாக வழி நடத்துவது, தன்னை நம்பி வருவோருக்காக இறுதி வரை நிற்பது, காதல், அதிரடி என அனைத்து விதங்களிலும் அசத்தி இருக்கிறார்.
சாய் பல்லவி வழக்கம் போல அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் சரி, காதலன் எப்போது திரும்புவான் என சோகத்தை வெளிப்படுத்துவதிலும் சரி சிறப்பான நடிப்பு. நம்ம ஊர் கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு மற்றும் உடன் நடித்த நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். உப்பெணா படத்தை போலவே தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும், பின்னணி இசையுமே படத்தின் பெரும் பலம். “நமோ நமச்சிவாயா” பாடல் இரையில் அட்டகாசம்! ஒளிப்பதிவு படத்தை அடுத்த கட்டத்துக்கு தூக்கி சென்றுள்ளது. ஒரு உண்மைச் சம்பவத்தை, நல்ல திரைக்கதையுடன் தந்து ஒரு சிறப்பான திரை அனுபவத்தை தந்துள்ளார் இயக்குனர் சந்து மாண்டேட்டி.. நாக சைதன்யாவின் திரையுலக வாழ்வில் நிச்சயம் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.