சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்திருக்கும் 150வது படம் “தி ஸ்மைல்மேன்”. “மெமரீஸ்” படத்தை இயக்கிய ஷ்யாம் பிரவீன் இயக்கியுள்ள இந்த படம் ராட்சசன், போர்த்தொழில் போல ஒரு சீரியல் கில்லர் திரைப்படம். படம் எப்படி இருக்குனு இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதை:
அல்ஸைமர் நோய் பாதிப்பால் ஒரு வருடத்திற்குள் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். கடந்த காலத்தில் அவர் வாழ்வில் இருந்த ஒரு பெண் குழந்தை நினைவில் வந்து போகிறது. அதே நேரம் 5 ஆண்டுகளுக்கு முன்பு என்கவுண்டர் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட ஸ்மைல்மேன் சீரியல் கில்லர் பாணியில் மீண்டும் கொலைகள் நடக்கின்றன. அல்ஸைமர் நோய் பாதிப்பால் நினைவுகளை இழந்து வரும் சரத்குமார் அந்த சீரியல் கில்லரை கண்டுபிடித்தாரா? யார் அந்த சீரியல் கில்லர்? அவன் நோக்கம் என்ன? என்பது தான் கதை.
நடிகர்கள் & நடிப்பு:
மீண்டும் ஒரு சீரியல் கில்லர் படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார். காவல்துறை அதிகாரியாக கச்சிதமான, பொருத்தமான தேர்வு. அல்ஸைமர் பாதிப்பால் இயங்க முடியாமல் தவிக்கும் தவிப்பை தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கேஸை துப்பறியும் குழுவில் உள்ல ஸ்ரீகுமார், சிஜா ரோஸ் கதாபாத்திரங்களும் நன்றாகவே இருந்தது. மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இனியா, சிறந்த நடிப்பு. ஜார்ஜ் மரியான், சுரேஷ் சந்திர மேனன், ராஜ்குமார், பேபி ஆலியா, பிரியதர்ஷினி, குமார் நடராஜன் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். படத்தின் சஸ்பென்ஸ் கேரக்டரில் வந்து நடித்தவரும் சிறந்த நடிப்பு.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பின்னனி இசை படத்துக்கு கூடுதல் பலம். விக்ரம் மோகன் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியதாகவே உள்ளது. ஷான் லோகேஷ் எடிட்டிங் படத்துக்கு பெரிய உதவியாக அமைந்துள்ளது.
இயக்குனர்கள் ஷ்யாம் பிரவீன் & கமலா ஆல்கெமிஸ் திரைக்கதை, வசனம் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. முதல் பாதி ஓகே ரகம், இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. ஃபிளாஷ்பேக் காட்சிகளும் படத்துக்கு பலம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். திரில்லர் பட ரசிகர்கள் இந்த “தி ஸ்மைல் மேன்” நிச்சயம் ஒரு நல்ல தீனி தான். ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பும் திரையில் தெரிகிறது.