ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார். அதனால், அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட, அவரது மதுப்பழக்கம் அதிகமாகிறது. இது பிடிக்காத அவரது மனைவி அவர் மீது கோபம் கொள்கிறார். இதற்கிடையே, அவரின் பார்வை திடீரென்று பறிபோகிறது. இதனால் அவரது மனைவி எல்லாமுமாக இருக்கிறார். இந்த நிலையில், சென்னையில் ஒரே பாணியிலான தொடர் கொலைகள் நடக்கிறது. கொலையாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல்துறை சரியான துப்பு கிடைக்காமல் தடுமாற, திடீரென்று அதே பாணியில் நாயகனின் மனைவியும், உள்பக்கம் தாளிட்ட வீட்டுக்குள் கொலை செய்யப்படுகிறார். வழக்கை விசாரிக்கும் காவல்துறை, வெளியாட்கள் யாரும் அடுக்குமாடி குடியிருப்பில் வரவில்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு, உள்பக்கமாக தாளிட்ட வீட்டுக்குள் பெண்ணின் கொலையில் குழப்பமடைகிறது. அதே சமயம், கண் பார்வை இல்லாத நாயகன் மீதும் போலீஸின் சந்தேகப்பார்வை திரும்புகிறது. ஆனால், தனது மனைவியை கொலை செய்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க, தனது போலீஸ் நண்பரின் உதவியோடு களத்தில் இறங்குகிறார். அதன் பின் கொலையாளியை கண்டுபிடித்தாரா?, உண்மையான கொலையாளி யார் ? என்பதே இப்படம்,
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அழுத்தமான கதாபாத்திரத்தில் ஓவராக அல்லாமல் அளவாக நடித்திருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. கண் பார்வை இழந்தவராக மிக கச்சிதமாக நடித்திருப்பவர், மனைவி இறப்புக்குப் பிறகு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். பல இடங்களில் அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சூழல் இருந்தாலும், அதை சரியான முறையில் கையாண்டு, இயல்பு மீறாமல் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரீன் பிர்சாடா கணவரின் சரியில்லாத போக்கைப் பார்த்து கோபம் கொள்வதும், பிறகு அவருக்காக கலங்குவதும் என்று கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சீரியல் கில்லராக நடித்திருக்கும் சுனில், தான் செய்யும் கொலைகளை கொண்டாடும் விதமும், மகிழ்ச்சியில் சிரிக்கும் விதமும் பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது. அனிகா சுரேந்தர் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் பார்வையாளர்களை கவர்கிறார். வசந்த் ரவியின் நண்பராக நடித்திருக்கும் நாகேந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடன இயக்குநர் கல்யாண் இருவரும் இயல்பாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஜ்மல் தஷீன் இசையில் பாடலும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் லைட்டிங் மற்றும் பிரேம்கள் மூலம் கிரைம் திரில்லர் ஜானரில் இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் ஒரு வீட்டுக்குள் நடக்கும் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் மிரட்டல்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் சபரிஷ் நந்தா, சைக்கோ கொலையை கதைக்களமாக கொண்டு திரைக்கதை அமைத்திருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய மர்ம முடிச்சோடு படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். உள்பக்கம் தாளிட்ட வீட்டுக்குள் நடக்கும் கொலை எப்படி நடந்தது ? என்ற கேள்வியின் மூலம் பார்வையாளர்கள் மனதில் பல யூகங்களை எழுப்பும் இயக்குநர், சைக்கோ கொலையாளி போலீஸிடம் பிடிபட்ட உடன், நாயகியின் கொலையில் மேலும் ஒரு மர்ம முடிச்சைப் போட்டு பார்வையாளர்களின் யூகங்களை பொய்யாக்கி, இறுதி வரை பதற்றத்துடனும், ஆச்சரியத்துடம் பயணிக்க வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், ‘இந்திரா’ நல்ல சஸ்பென்ஸ் அனுபவம்.



