இயக்குனர் – சிக்கல் ராஜேஷ்
நடிகர்கள் – மகேந்திரன், நீமா ராய், நிழல்கள் ரவி ,சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர்
இசை – ஏ .எம் அசார்
தயாரிப்பு – பி. மகேந்திரன் – மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி
நாளுக்கு நாள் மக்கள் தொகை கணக்குகளை விட யூடியூப் தளங்கள் அதிகமாகிவிட்டன.அப்படிச் சமூக ஊடகங்களில் அளவுக்கு மீறியும் வெறுப்பேற்றும் வகையிலும் வரம்பு மீறியும் சுய தம்பட்டம் அடித்தும் , கண்ட கண்ட பதிவுகளைப் போட்டும் மக்களை வெறுப்பேற்றுகிறார்கள்.பணத்திற்காகவும் அதிக பார்வைகள் வரவேண்டும் என்பதற்காகவும் எல்லை மீறி ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்களைப் பட்டியல் போட்டுக் கொண்டு வரிசையாகப் கொலை செய்கிறார் ஒரு முகமூடி போட்ட மர்ம மனிதர். அவர் யார்? அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்பதைச் சொல்வதே
இந்த ‘இரவின் விழிகள்’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கர்ணா பாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன்,கதாநாயகன் போல் வருகிறார். அவர் ஓர் அறிமுக நடிகர்தான் என்றாலும் அதை காட்டாமல் நல்ல அனுபவம் பெற்ற நடிகரை போல நடித்துள்ளார் .நாயகியாக ரேஷ்மா பாத்திரத்தில் நடித்திருக்கும் நீமா ராய் சுமாரான தோற்றம் தான் என்றாலும் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்தியுள்ளார். தனக்குக் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்.கவர்ச்சியும் காட்டி பார்வையாளர்களுக்கு மென்அதிர்ச்சி தருகிறார்.
படத்தை இயக்கியிருக்கும் சிக்கல் ராஜேஷ் கருப்பு கதாபாத்திரத்தில் வருகிறார்.அவரது பாத்திரம் திரைக்கதைக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது. நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்கள் அனுபவ நடிப்பின் மூலம் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. பின்னணி இசையிலும் குறைசொல்ல ஒன்றும் இல்லை. படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிப்புறங்களில் காட்டுப் பகுதியில் இருள் சூழ்ந்த இடங்களில் நடைபெற்றுள்ளது.ஒளிப்பதிவாளர் பாஸ்கர் காட்சிகளைத் தெளிவாகப் படமாக்கியுள்ளார்.
சமூக ஊடகங்களில் அட்டகாசம் செய்பவர்களுக்குச் சரியான சாட்டையடி கொடுத்துள்ளார் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.தங்கள் பொன்னான நேரத்தைச் சமூக ஊடகங்களில் விரயமாக்கும் போக்கையும் கண்டித்துள்ளார். சமூக ஊடகப் புள்ளிகள் கொலை செய்யப்படும் வரிசையில் நாயகன், நாயகி சிக்கிக் கொள்வது, தவிப்பது பரபரப்பூட்டுகின்றன.அதே நேரம் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்குக் கண்ணோரம் ஈரம் வரவழைப்பவை.பிரம்மாண்ட செலவுகள் இல்லாமல் எளிமையான கதையை எடுத்துக்கொண்டு இக்காலத்துக்கு ஏற்ற ஒரு கதையைப் படமாக உருவாக்கி இருக்கிறார் சிக்கல் ராஜேஷ்.
மொத்தத்தில், ‘இரவின் விழிகள்’ சமூக ஊடகங்களில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு அறிவுரை .



