இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
நடிகர்கள் – ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாகிர்
இசை – அனிருத் ரவிச்சந்திரன்
தயாரிப்பு – சன் பிக்சர் – கலாநிதி மாறன்
ஒருவர் விடுதி வைத்துள்ளார், அவரது நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத ஒரு நண்பர் திடீரென்று இறந்து விடுகிறார். அவரது இறப்பு கொலை என்பதை கண்டுபிடிப்பதோடு, கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் நாயகன், கடத்தல் கூட்டத்திற்குள் நுழைகிறார். அப்போது கடத்தல் கூட்டத்தைப் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருவதோடு, அவர்களால் தனது நண்பரின் மகளுக்கும் ஆபத்து இருப்பதை கண்டுபிடிக்கிறார். அவர்களிடம் இருந்து நண்பரின் மகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் போது அவருக்கு எதிராக வெவ்வேறு வில்லன்கள் உருவெடுக்க, அதன் மூலம் பல கிளைக்கதைகளும் விரிகிறது. அதனை தாண்டி அவர் எப்படி தான் செய்ய நினைத்ததை செய்து முடிக்கிறார், என்பதை அவரது முந்தையக்கால வாழ்க்கை, அவர் யார்? என்ற பின்னணியோடும், பல குழப்பங்களோடும் சொல்வதே ‘கூலி’.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் வழக்கம் போல் ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார். இளமைக்கால ரஜினிகாந்தை கிராபிக்ஸ் உதவியுடன் ரசிக்கும்படி காண்பித்திருக்கிறார்கள். குறிப்பாக வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்துமே அந்த கால ரஜினிகாந்தை நன் கண்முன் நிறுத்துகிறது. இன்னும் அதே துடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார்,
வில்லனாக நடித்தாலும், ரஜினிகாந்துக்கு உண்டான மரியாதை கொடுத்து நடித்திருக்கிறார் நாகர்ஜுனா. ரஜினிகாந்த் அவரை சார் என்று அழைத்தால், வேண்டாம் பெயர் சொல்லி கூப்பிடு, என்று சொல்பவர், அவர் தரையில் உட்கார்ந்தாலும், ரஜினிகாந்துக்கு நாற்காலி எடுத்து கொடுத்து உட்கார வைப்பது என்று, தான் ஒரு மிகப்பெரிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதையே மறந்துவிட்டு மனுஷன் நடித்திருக்கிறார்.
நாகர்ஜூனாவை மட்டும் அல்ல சில சமயங்களில் ரஜினிகாந்தையும் ஓரம் கட்டும் அளவுக்கு நடித்திருக்கிறார் மலையாள நடிகர் சவுபின் சாஹிர். படம் முழுவதும் வரும் சவுபின் சாஹிர், பல காட்சிகளுக் மற்ற கதாபாத்திரங்களை ஓவர் டேக் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பதில் முந்திக்கொள்கிறார். ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருக்கும் சத்யராஜ், அவரது மகள்களாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளஷி மற்றும் கண்ணன் ரவி, காளி வெங்கட், சார்லி, அய்யப்பன் பி.சர்மா என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அமீர் கான், விக்ரம் படத்தில் வரும் சூர்யாவை நினைவுப்படுத்துகிறார்.
அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறது. குறிப்பாக ”மோனிகா பாடல்” பாடல் ’ஜெயிலர்’ படத்தில் வரும் தமன்னா பாடலை கேட்பது போல் இருக்கிறது. அதை படமாக்கப்பட்ட விதமும் அப்படியே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், கேட்டதை விடவும் அதிகமாக கிடைத்திருப்பதால் காட்சிகள் அனைத்தையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஜெயிலர் பட பாணியில், தனது முந்தைய படங்களின் ஐடியாவை வைத்துக்கொண்டு கதை மற்றும் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கதைக்குள் ஒரு கதை, என்ற கோணத்தில் படத்தை மிக நீளமாக இயக்கியிருக்கிறார்.வில்லன்களின் திருப்பங்களை வைத்து காட்சிகளை வேகமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார்,
மொத்தத்தில் இந்த ” கூலி ” நிச்சயம் பந்தயம் அடிக்கும்.



