இயக்கம் – சிவகுமார் முருகேசன்
நடிகர்கள் – ரியோ ராஜ், மாளவிகா, விக்னேஷ்காந்த், ஷீலா
இசை – சித்து குமார்,
தயாரிப்பு – வெடிக்காரன் பட்டி சக்திவேல்.
நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று ஈகோ பிரச்சனைகள் வளர்ந்து விவாகரத்து வரை செல்கிறது. நாயகி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறார். ஆனால், நாயகன் அவருடன் இணைந்து வாழ விரும்புவதாக சொல்ல, விவாகரத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், சிக்கல் ஏற்பட்டாலும் விவாகரத்து பெற்றே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் அந்த பெண். இறுதியில் இந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்தார்களா? விவாகரத்து பெற்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரியோ ராஜ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா ஒருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக முழு படத்தையும் நடிப்பால் தாங்கி இருக்கிறார்கள். இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சிறு சிறு சண்டைகள் அனைத்தும், தற்போதைய காலக்கட்ட தம்பதிகள் கடந்து போகும் சம்பவங்கள் என்பதால், பார்வையாளர்களை கைதட்டி, விசில் அடித்து ரசிக்க முடிகிறது. வழக்கறிஞர்களாக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த், ஷீலா இருவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையில் கவர்ந்து இருக்கிறார். ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தற்போதைய காலக்கட்ட தம்பதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன். இருவருக்கும் இடையே ஈகோ, அதனால் ஏற்படும் விளைவுகளை கலகலப்பாக சொல்லி, சிந்திக்க வைக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர். படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றதாக மட்டும் இன்றி, அனைவரது குடும்பத்திலும் நடப்பவைகளாக உருவாக்கி இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ்.
மொத்ததில் இந்த ” ஆண் பாவம் பொல்லாதது ” அனைவருக்குமான படம்.



