ஆரியன் – விமர்சனம்

0

இயக்குனர் : பிரவீன்.கே
நடிகர்கள் : விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,
இசை : ஜிப்ரான்
தயாரிப்பு : விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – சுப்ரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால்

ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் திடீரென்று எழுந்து துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணைக் கைதிகளாக்கி விடுகிறார்.அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன், முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என்று சொல்கிறார். பிணைக் கைதிகளை காப்பாற்ற , அந்த கடத்தல்காரனின் மிரட்டல் குறித்து விசாரிக்கும் காவல்துறை, தொடர் கொலைகளை தடுக்க நாயகன் தலைமையில் குழு ஒன்றை அமைக்கிறது. இதன் பின் அந்த மக்களை நாயகன் காப்பாற்றினாரா? ஏன் இதனை அவர் செய்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வரும் விஷ்ணு விஷால், கொலை வழக்கை விசாரிக்கும் தோணியில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். மானாசா உடனான காதல், திருமணம், விவாகரத்து என்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் பாதிப்புகளை ஒரு பாடலின் மூலம் வெளிக்காட்டினாலும், அதை தனது அழுத்தமான நடிப்பு மூலமாகவும், உடல் மொழி மூலமாகவும் அனாசியமாக ரசிகர்களிடத்தில் கடத்தி அசத்தியிருக்கிறார். கொலைகளை தடுப்பதற்கான முயற்சியில், அவர் சேகரிக்கும் தகவல்கள், அதனை வைத்து நடத்தும் விசாரணை என்று படத்தின் விறுவிறுப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இறுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் செல்வராகவன், சைக்கோ கொலையாளியாக பயமுறுத்தவில்லை என்றாலும், அடுத்து யாரை கொலை செய்யப் போகிறார் ? என்ற கேள்வியை படம் முழுவதும் ஏற்படுத்தி பார்வையாளர்களை பதற்றத்துடனே வைத்திருக்கிறார். அலட்டல் இல்லாத அவரது நடிப்பு, இயல்பான உடல் மொழி ஆகியவை, அவர் செய்யும் அனைத்து விசயங்களையும் நம்ப வைத்துவிடுகிறது. தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களுக்கு படத்தின் வேகத்தை கடத்துகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.பாடல்களும் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், தன் கேமரா கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம், பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறார். நம்மை இருக்கை நுனியில் அமர அவரது உழைப்பு பெரிதும் உதவியுள்ளது,

இந்தப் படத்தை. எழுதி இயக்கியுள்ளார் பிரவீன்.கே, இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சைக்கோ திரில்லர் கதையை கையாண்டிருப்பதோடு, அதை நம்பும்படி லாஜிக்கோடு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருப்பது படத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. கொலையாளி யார்? என்பது தெரிந்து விட்டாலும், அவரைப் பற்றி சிந்திக்க விடாமல், அவர் செய்யப் போகும் கொலைகள் மற்றும் அதனை தடுக்க முயற்சிக்கும் ஹீரோவின் பயணத்தை படு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அவ்வபோது செல்வராகவனின் செயல்களை புத்திசாலித்தனமாக சித்தரித்து காட்சிக்கு காட்சி வியக்க வைக்கிறார். நாம் பல சைக்கோ திரில்லர் படங்களை பார்த்திருப்போம் ஆனால் இந்தப்படம் அனைத்திலும் மாறுபட்டதாக இருக்கும்.

சஸ்பென்ஸ் திரில்லர் படம் விரும்பும் ரசிகர்கள் கட்டாயம் ஒரு முறை பார்த்து விட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here