நம்முடைய குழந்தைப் பருவங்களில் பாட்டி கதை சொல்லலில் இருந்து தற்போது வரை ராமாயணா கதையை நாம் எத்தனையோ தடவை கேட்டிருப்போம். அப்படி இருந்தும் வெள்ளித்திரையில் திரைப்படமாக வரும்போது அதையும் பார்க்க ஆர்வம் எழுவது உண்மை. அந்த வகையில் அனிமேஷனில் உருவான ‘ராமாயணா – தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” என்ற படம் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
படத்தின் கதை:
ராமர் அயோத்தியின் அரசராக பதவி ஏற்கும் சூழலில் சூழ்ச்சி செய்து அவரை 14 ஆண்டுகள் வானவாசம் அனுப்புகிறார்கள். மனைவி சீதை மற்றும் தம்பி லக்ஷ்மணன் ஆகியோருடன் வனத்தில் வாழ்கிறார். ஒரு மோசமான சூழலில் சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச்சென்று விடுகிறார். சீதையை ராமன் எப்படி மீட்டார்? வழியில் அவருக்கு உதவியாக யார் எல்லாம் இருந்தார்கள் என்பது தான் கதை.
டிவி தொடர்களாக பார்த்த ராமாயணத்தை, ஒரு சில திரைப்படங்களாக பார்த்த ராமாயணத்தை விடவும் அனிமேஷனில் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. பின்னணி இசையும், அவ்வப்போது வரும் டப் செய்யப்படாத இந்திப் பாடல்களும் நம்மை ரசிக்க வைக்கிறது.
ராமன், லக்ஷ்மணன், சீதை, கும்பகர்ணன், ஹனுமான், ஜடாயு, தசரதன் என எண்ணற்ற கதாபாத்திரங்களை உள்ளடக்கிய இந்த கதை எப்போது பார்த்தாலும் புது அனுபவத்தை கொடுக்க வல்லது. அனிமேஷனில் பார்க்கும் ஒவ்வொரு இடங்களும் மிக அழகாக இருக்கிறது. கதையை எந்த தொந்தரவும் செய்யாத வண்ணம் தேவையான விஷயங்களை மட்டுமே சொல்லி நம்மை 2:15 மணி நேரமும் சீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
தமிழ் டப்பிங் கொடுத்த கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். காலத்துக்கும் அவர்களது குரல் இந்த ராமாயணத்தில் ஒலிக்கும் என்பது நிச்சயம். கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளுக்கு இந்த ராமாயணத்தை மிக எளிதாக கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ள இப்படத்தை குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் போய் ரசித்து விட்டு வாருங்கள்.