The Akaali Movie Review

The Akaali Movie Review

அக்காலி

முழுக்க முழுக்க புதுமுகங்களின் முயற்சியில் மாறுபட்ட களத்தில், திரில்லர் திரைப்படமாக வந்துள்ள படம் அக்காலி.

அறிமுக இயக்குநர் முஹம்மத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், அர்ஜய், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோதினி, யாமினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

PBS ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் யூகேஸ்வரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் மோகன் இசையமைத்திருக்கிறார்.

சாத்தான் வழிபாடு பற்றி பேசியிருக்கும் இந்த படம் கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள வேதங்களைப் பற்றியும் பேசியிருக்கிறது. கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை மட்டுமே வைத்து கதையின் மீதும், மேக்கிங்கின் மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்டிருந்து இந்த திரைப்படம் இயக்குனர் மனதில், திரைக்கதையில் சொல்ல நினைத்ததை ரசிகர்களுக்கு கடத்தியதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொடர் அமானுஷ்ய கொலைகளை பற்றி அந்த காலத்தில் விசாரணையில் இருந்த காவல்துறை அதிகாரி ஜெயக்குமாரிடம் இன்னொரு பெண் அதிகாரியான ஸ்வயம் சித்தா விசாரிப்பதாக துவங்கும் கதை, அதன் பிறகு அந்த நேரத்தில் அந்த வழக்கில் நடந்த பல அதிர்ச்சியான விஷயங்களை ஜெயக்குமார் சொல்ல சொல்ல கதை விரிவடைகிறது. 6 பேர் நரபலி கொடுக்கப்பட, 7வதாக ஒரு பத்திரிக்கை நிருபரும் அங்கு பலி கொடுக்கப்பட்டிருக்கிறார். இதை எல்லாம் ஜானிஸ் என்ற ஒரு இளம் சூனியக்கார பெண் செய்தார் என நினைக்கும் காவல்துறை அதன் ஆணிவேர் வரை சென்று அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது. அக்காலி யார்? அடுத்த பலி யார்? இந்த வழக்கின் அம்சங்களை ஆறு ஆண்டுகள் கழித்து அந்த பெண் போலீஸ் ஏன் தெரிந்து கொள்ள முயல்கிறார் என்பதே மீதிக்கதை.

இந்த படத்தை பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின் என சொல்வதை விட கதை தான் ஹீரோ. பில்லி, சூனியம், சாத்தான் வழிபாடு, பிளாக் மேஜிக் என படம் முழுக்க அமானுஷ்யமாகவே பயணிக்கிறது. அதற்கேற்ப பிளாக் டோனில் படம் முழுக்க ஒரு வித இருண்ட உலகிற்குள் நம்மை அழைத்து செல்கிறது. நாம் அன்றாடம் பார்க்கும் சென்னையையே மிக வித்தியாசமாக தோன்ற வைத்திருக்கிறது இந்த படம். போலீஸ் இன்வெஸ்டிகேஷன் என்ற வகையில் துவங்கும் இந்த படம், முழுக்க அமானுஷ்ய உலகிற்குள் நம்மை அழைத்து செல்கிறது.

காவல்துறை அதிகாரியான ஜெயக்குமார் படம் முழுக்க வியாபித்திருக்கிறார், நல்ல பொருத்தமான நடிப்பு. நாசர் ஒரு முக்கிய இடத்தில் வந்து தன் கதாபாத்திரத்தை செய்து விட்டு போகிறார். ஸ்வயம் சித்தா பெரிதாக வேலை இல்லை என்றாலும் ஆபீஸ் ரூமில் விசாரணை செய்து விட்டு போகும் கதாபாத்திரம். வினோத் கிஷன் ஒரு கெஸ்ட் ரோலில் வந்து கதையின் முக்கிய முடிச்சுகளை அவிழ்த்து விட்டு போயிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் பொருத்தமாகவே இருக்கிறார்கள்.

கிரி முர்ஃபியின் ஒளிப்பதிவு படத்துக்கு உள்ளேயே நம்மை அழைத்து செல்கிறது. அனீஸ் மோகன் இசை ஒரு வித உணர்வை நமக்கு கடத்துகிறது. இயக்குனர் முஹம்மது ஆசிப் ஹமீது ஒரு வித்தியாசமான கதையை சொல்ல முயற்சித்து தொழில்நுட்ப ரீதியில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் கதையில் பல விஷயங்கள் அனைவருக்கும் புரியும் விதம் இல்லாமல் போனது ரசிகர்களை சில நேரங்களில் படத்துடன் ஒன்ற முடியாமல் செய்கிறது. அத்துடன் படத்தின் நீளமும் பாதகமாக அமைந்திருக்கிறது. சர்ரென செல்கிறது முதல் பாதி, ஆனால் இரண்டாம் பாதி திரும்ப திரும்ப ஒரே காட்சிகள் வருவது போன்ற உணர்வை தந்து ரசிகர்களை கொஞ்சம் விலக வைக்கிறது. ஒரு சில ட்விஸ்டுகள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாதது மைனஸ்.

ஒரு சிறந்த அனுபவத்தையும், புது விதமான கதைக்களத்தையும் தந்த விதத்தில், இந்தக்குழுவினரை பாராட்டலாம்.
குழுவை பாராட்டலாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *