சூரியின் ஆக்சன் அவதாரம் ஒர்க் அவுட் ஆனதா? | Garudan Movie Review
காமெடியனாக வலம் வந்த சூரி விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் கருடன். அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் என இரண்டு ஹீரோக்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ரேவதி சர்மா நடித்திருக்கிறார். சமுத்திரகனி, ஷிவதா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார். ஹீரோவாக அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் சூரிக்கு இந்த கருடன் கை கொடுத்ததா? சூரிக்கு அடுத்த வெற்றிப்படமாக அமைந்ததா? பார்க்கலாம்.
படத்தி கதைப்படி, தேனி மாவட்டம் கோம்பை என்ற ஊரில் சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். வாழ்ந்து கெட்ட ஜமீன்தார் வாரிசான உன்னி முகுந்தன் வீட்டில் சிறு வயதில் இருந்தே வளரும் சூரி, உன்னியின் மொரட்டு விசுவாசி. அவன் மீது எவனாவது கை ஓங்கினால் கூட அவர்களை அடித்து விடும் அளவுக்கு விசுவாசம். உன்னிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை. சசிகுமார் நட்புக்காக எதையும் செய்பவர், அத்துடன் நட்பில் கூட நேர்மையை எதிர்பார்ப்பவர். இவர்கள் வாழ்வில் கோவில் சொத்து ஒன்றை அபகரிக்க திட்டம் போடும் அமைச்சர் ஒருவர் குறுக்கிட, அதன் பின் என்ன நடந்தது? கோவில் சொத்தை பாதுகாத்தார்களா? உன்னி முகுந்தன் வாழ்க்கை என்ன ஆனது? சூரியின் விசுவாசம் எதுவரை நீடித்தது? என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகனாக சூரி, விடுதலையில் இருந்து இந்த படத்தில் இன்னும் பல படிகள் முன்னேறி இருக்கிறார். ஆக்ஷனிலும் பட்டையை கிளப்புகிறார். ஸ்லோ மோஷன் காட்சிகளில் புழுதி பறக்க சண்டை போடுவது, சாமி வந்தவராக வெறியாட்டம் போடுவது, காதலியுடன் உணர்ச்சிகரமான பேசுவது, விசுவாசமா? நேர்மையா என பல இடங்களில் தவிப்பது என படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். இடைவேளை மற்றும்
கிளைமாக்ஸ் காட்சிகளில் அதகளம் செய்கிறார். தன் எல்லையை சரியாக உணர்ந்து, கதை ஓட்டத்துக்கு ஏற்ப ஆக்ஷன், காதல் பாடல் என கமெர்சியல் அம்சங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
சசிகுமார் படத்தின் இன்னொரு ஹீரோ. ராஜ கம்பீரத்துடன் மிடுக்கான தோரணையுடன் சசிகுமார் தோன்றும் காட்சிகள் எல்லாமே அவர் தூக்கி சாப்பிடுகிறார். அவர் இயல்பாக வந்தாலே போதும் என்றது மாதிரியான ஒரு ஸ்கிரீன் பிரசன்ஸ். கோவில் சொத்தை காக்கணும், நண்பர்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என அவரின் இயல்பான குணாதிசயத்தை திரையிலும் பிரதிபலிக்கிறார்.
உன்னி முகுந்தன் பல்வேறு உணர்வுகளை உள்வாங்கி நடிக்கக் கூடிய ஒரு கதாபாத்திரம். மிக சிறப்பாகவே நடித்திருக்கிறார். சமுத்திரகனி சூழ்நிலைக் கைதியாக இருக்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி கதாபாத்திரம். ஆர்.வி.உதயகுமார் அமைச்சராக ஸ்கோர் செய்கிறார். அவர் அடிக்கும் பஞ்ச் வசனங்களுக்கு தியேட்டரில் கல கல ஷிவதா, ரேவதி சர்மா, ரோஷிணி ஹரி பிரியன், பிரிகிடா சகா என ஹீரோயின்கள் அனைவருமே சிறப்பான நடிப்பு. சசிகுமார் மனைவியாக வரும் ஷிவதாவின் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி, வடிவுக்கரசி என எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவில் தேனியின் இன்னொரு பரிமாணத்தை பார்க்க முடிகிறது. கோவில் திருவிழா மற்றும் செங்கல் சூளை புழுதி பறக்கும் சண்டைக்காட்சிகள் என அனைத்தும் சிறப்பாகவே காட்சிப்படுத்தி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் விதத்தில் இருக்கிறது. பஞ்ச வர்ண கிளியே இதமாகவும், வெறியேற்றும் விதத்தில் அமைந்த ஒத்தப்பட வெறியாட்டம் பாடலும் படத்துக்கு பிளஸ். பின்னணி இசையில் அதகளம், குறிப்பாக இடைவேளை காட்சியில் வரும் இசை அட்டகாசம்.
மொத்தத்தில் சூரி ஆக்சனில் நல்ல கிராமத்து படம் அனைவரும் ரசிக்கும் படமாக வந்திருக்கிறது இந்த கருடன்.