உயிர் தமிழுக்கு திரை விமர்சனம்
கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார். அவருக்காக நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி வார்டு கவுன்சிலராக வெற்றி பெறுபவர், காதலிலும் வெற்றி பெறுகிறார். ஒரு பக்கம் சாந்தினி உடனான காதலை வளர்ப்பவர், மறுபக்கம் அரசியலிலும் வளர்ந்து வருகிறார். ஆனால், அமீரின் காதலுக்கு சாந்தினியின் தந்தையான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஆனந்தராஜ் முட்டுக்கடை போடுகிறார். இதனால், அமீருக்கும், ஆனந்தராஜுக்கும் இடையே பகை ஏற்படுகிறது. இதற்கிடையே, ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட அந்த கொலை பழி அமீரின் மீது விழுகிறது. சாந்தினியும் தனது தந்தையை கொலை செய்தது அமீர் தான் என்று நம்புகிறார். உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தன் மீது விழுந்த கொலை பழியை துடைப்பதற்காக, கட்சி மேலிடம் வழங்கிய இடைத்தேர்தல் வாய்ப்பை அமீர் நிராகரிக்கிறார். ஆனால், அமீர் தான் உண்மையான குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்காக, தனது தந்தை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுக்காட்டுகிறேன், என்று சாந்தினி சபதம் எடுக்க, தன்னை நிரபராதி என்று நிரூபிக்க சாந்தினியை தோற்கடிப்பதற்காக அமீரும் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார். இறுதியில், காதலுக்காக அரசியல் களத்தில் இறங்கிய அமீரின் காதல் மற்றும் தேர்தல் இரண்டும் என்னவானது? என்பதை தமிழக அரசியல் சம்பவங்களைக் கொண்டு சிரிக்க சிரிக்க சொல்வது தான் ‘உயிர் தமிழுக்கு’.
அமீர் வழக்கம்போல் அவரின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக அறிமுகமாகியிருக்கும் சாந்தினி ஶ்ரீதரன், முதல்படத்திலேயே ஏராளமான இரசிகர்களைப் பெற்றுவிட்டார்.அந்த அளவுக்கு அவருடைய அழகும் பாத்திரத்தை உணர்ந்த நடிப்பும் அமைந்திருக்கிறது.
ஆனந்த ராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சரவண சக்தி, கஞ்சா கருப்பு ஆகிய அனைவருமே படம் வேகமாக நகரவும் சிரித்துக்கொண்டே செல்லவும் பயன்பட்டிருக்கிறார்கள். வித்யாசாகர் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம், பின்னணி இசையிலும் தாழ்வில்லை. தேவராஜின் ஒளிப்பதிவில் திரைக்கதையோட்டத்தின் பரிமாணங்கள் காட்சிகளாக விரிந்திருக்கின்றன.
தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் காதல் கதையை ஜாலியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆதம்பாவா, மறைந்த முன்னாள் முதல்வரின் நினைவிடத்தில் தியானம், அதே நினைவிடத்தில் ஒருவர் போட்ட சபதம், ஆன்மீ அரசியல் உள்ளிட்ட பல விசயங்களை திரைக்கதையுடன் சேர்த்து சிரிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.