ஹிட் லிஸ்ட் திரை விமர்சனம்
வள்ளலாரின் கொள்கையின் படி எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க கூடாது நேர்மையாக வாழ வேண்டும் என்ற கோட்பாடுடன் இருக்கும் மின் பொறியாளர்தான் விஜய் கனிஷ்கா. அம்மா தங்கச்சி என்று அழகான குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆக வரும் சரத்குமார் வட சென்னையில் உள்ள ஒரு முக்கியமான ரவுடியை பிடிக்கத் தயாராகிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியின் போது விஜய் கனிஷ்காவும் சரத்குமாரும் சந்திக்க நேரிடுகிறது. அந்த நேரத்தில் விஜய் கனிஷ்காவிற்கு ஒரு வெளிநாட்டு நம்பரில் இருந்து தொடர்ந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் அவருடைய அம்மா மற்றும் தங்கச்சியை கடத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதை உடனே சரத்குமாரிடம் விஜய் கனிஷ்கா சொல்கிறார், சரத்குமாரும் உடனடியாக ஆக்ஷனில் இறங்குகிறார். இருவரும் கடைசியில் விஜய் கனிஷ்காவின் அம்மா மற்றும் தங்கையை மீட்டார்களா..? இல்லையா..? என்பதை படத்தின் கதை.
காவல்துறையின் புலன் விசாரணை – மர்ம நபரின் நெருக்கடி – பயங்கரமான கொலை குற்றவாளி ஆகியோருக்கு இடையே சிக்கித் தவிக்கும் போது நல்ல நடிப்பை வழங்கி, ஒரு இயக்குநரின் வாரிசு என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தி இருக்கிறார் விஜய் கனிஷ்கா.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரத்குமார், படம் முழுவதும் வந்தாலும் முதல்பாதியில் பெரிய வேலை ஏதும் இன்றி பயணிக்கிறார். அதே சமயம் இரண்டாம் பாதியில் தனக்கான ஆக்ஷன் காட்சிகளோடு, முகமூடி மனிதர் யார்? என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.
விஜய் கனிஷ்காவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும், வழக்கம் போல் நல்ல விசயங்களை பேசும், நல்ல மனம் கொண்ட வேடத்தில் நடித்திருக்கிறார்.
மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், வழக்கம் போல் தனது ஸ்டைலிஷான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கே.இராம்சரண் ஒளிப்பதிவில் நடிகர்கள் அழகாகத் தெரிகின்றனர்.காட்சியமைப்புகளும் தெளிவாக அமைந்திருக்கின்றன. சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்ன்ணி இசை படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டியிருக்கிறது.
வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும் அதற்காக விவரிக்கப்படும் காரணம் மனித நேயத்தை கொண்டிருப்பது தான் பாராட்டப்பட வேண்டிய சிறப்பம்சம்.