சந்தானம் குழுவின் கூட்டணியில் வந்திருக்கும் காமெடிப்படம் வடக்குப்பட்டி ராமசாமி எப்படி இருக்கிறது?
வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர் சந்தானம். சாமி இல்லை என்று சொல்லும் சந்தானத்திற்கு அந்த சாமியை வைத்தே சம்பாதிக்க கூடிய வாய்ப்பு அமைகிறது. அதை சரியாக பயன்படுத்தி தனது சொந்த நிலத்தில் ஒரு கோவிலை கட்டி, அதன் மூலம் ஊர் மக்களை ஏமாற்றி சம்பாதித்து வருகிறார். இதை அறிந்த அந்த ஊர் தாசில்தார் சந்தானம் உதவியுடன் கோவிலில் பணம் சம்பாதிக்கலாம் என நினைக்க, அதற்கு சந்தானம் மறுக்க, பிறகு அவர் சில சூழ்ச்சி செய்து கோவிலை மூடுகிறார், பிறகு ஊர் ஒன்று சேர்ந்ததா, கோவில் திறக்கப்பட்டதா என்பதே மீதிக்கதை.
சந்தானம் தனது டீமுடன் சேர்ந்து படம் பண்ணும்போது நாயகனுக்கான அடையாளங்கள் ஏதுமின்றி ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளார். இவருடன் கூடவே வரும் லொள்ளு சபா மாறன் மற்றும் சேசுவின் நகைச்சுவைக் காட்சிகள் திரையரங்கையே அதிர வைக்கிறது. சேசுவின் பரதநாட்டியம், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி காமெடிகள் எல்லாம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, கூல் சுரேஷ், இட்ஸ் பிரசாந்த் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள். ஹீரோயின் மேகா ஆகாஷ் பெயருக்கு இருக்கிறார்.
ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரிய பலம். படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை தங்களை மறந்து சிரிக்கும்படி அனைத்து விசயங்களையும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.
தியேட்டரில் கவலை மறந்து
வயிறு குலுங்க சிரிக்க வைப்பான் இந்த வடக்குப்பட்டி ராமசாமி.