ஹனுமான் திரை விமர்சனம்

0

ஹனுமனின் சக்தி ஒரு சாதாரண இளைஞனுக்கு கிடைத்தால் ? அவன் சூப்பர் ஹீரோவாக மாறினால் ? இந்த ஐடியா தான் படம்.

சின்ன டீம் சின்ன பட்ஜெட் ஆனால் அதை சொன்ன விதத்தில் ஈர்த்திருக்கிறார்கள்.

நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் மாபெரும் பலசாலியாக உருவெடுப்பதோடு, அதன் மூலம் ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். தேஜா சஜ்ஜாவின் சக்தி பற்றி தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய், அவரிடம் இருக்கும் சக்தியை பறிப்பதற்காக அவரை தேடி வருகிறார். அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதே மீதி படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா, துறுதுறு நடிப்பால் ஹனுமந்த் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பாலய்யா போல் ரயிலை விரலால் நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது. காமெடி கலந்த நடிப்பில் சிறுவர்களையும் கவரும் தேஜா, காதல் காட்சி, செண்டிமெண்ட் காட்சி ஆகியவற்றிலும் அளவாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர், ஹீரோ செய்ய வேண்டிய விசயங்களை செய்து அதிரடி காட்டுகிறார். ஹீரோவுக்கு சக்தி வந்ததும் வழக்கம் பாடல் காட்சிகளிலும், சில சண்டைக்காட்சிகளிலும் தலைக்காட்ட தொடங்குகிறார்.

நாயகனின் சகோதரியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். சாதாரணமாக இருக்கும் இந்த வேடத்துக்கு இவர் எதற்கு? என்று நினைக்கும்போதே அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவரும் நன்றாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார். வில்லனாக நடித்திருக்கும் வினய், அலட்சியத் தோரணையைச் சரியாக வெளிப்படுத்தி ஏற்றுக்கொண்ட வேடத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு மிக பிரமாண்டமாக இருக்கிறது.

பேண்டஸி அம்சங்கள் நிறைந்தவையாக இருப்பதால் இந்த ‘ஹனு-மான்’-னை அனைவரும் கொண்டாடுவார்கள். ஆன்மீகம் பேசும் படம் என்றாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரசாந்த் வர்மா இயக்கியிருக்கிறார்.

குடும்பத்தோடு கொண்டாடி சிரிக்க ஒரு அருமையான கமர்ஷியல் படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here