Salaar Movie Review
கேஜிஎஃப் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் நீல் பாகுபலி பிரபாஸ் நடித்திருக்கும் படம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வந்திருக்கிறது.
நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் வன்முறை மிகுந்த உலகத்திற்குள், அரச நாற்காலிக்கு நடக்கும் போராட்டம் தான் கதை.
மூன்று பழங்குடி சமூகத்தினர் சேர்ந்து ஆட்சி நடத்தும் பகுதியான கான்சார், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், தனியாக சட்டம் வகுத்துக்கொண்டு ராஜமன்னாரின் (ஜெகபதிபாபு) தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. ராஜமன்னாரின் மகனான வரதராஜா ராஜமன்னாரும் (ப்ரித்விராஜ்) தேவாவும் (பிரபாஸ்) உயிர் நண்பர்கள். ராஜம் மன்னாருக்கு பிறகு அவரது அரியணையில் அமர்வது யார்? என்ற போட்டியில், அவருடைய இரண்டாம் மனைவியின் மகனான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு உரிமை மறுக்கப்படுவதோடு, அனைவரும் ஒன்று சேர்ந்து அவரையும், அவருடைய ஆட்களையும் அழிக்க முடிவு செய்கிறார்கள். இதற்காக ஒவ்வொருவரும் தங்களது படைகளை தயார் செய்ய, பிரித்விராஜ் சுகுமாரன் மட்டும் எந்தவித படையையும் தயார் செய்யாமல் சிறுவயதில் பிரிந்துபோன, தனது நண்பன் பிரபாஸை உதவிக்கு அழைக்கிறார். நண்பனுக்காக எதையும் செய்யும் பிரபாஸ், தனிமனித ராணுவமாக நின்று தனது நண்பனுக்காக கான்சாரின் அதிகாரத்தை கைப்பற்றும் போரில் தீவிரம் காட்டும் போது, அவரைப் பற்றிய ஒரு உண்மை தெரிய வருகிறது. அது என்ன? என்பதே மீதி படத்தின் கதை.
பிரபாஸ் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து அதையும் ரசிக்கும்படி செய்திருப்பது வரவேற்பைப் பெற்று தியேட்டரில் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. படம் முழுவதும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார் பிரபாஸ். வில்லன் பிரித்விராஜ் பல காட்சிகளில் மௌனம் மட்டுமே சாதிக்கிறார். போகப் போக வசனம் பேசி இறுதிக் கட்டத்தில் வெடிக்கிறார்.
ஆத்யாவாக வந்திருக்கும் ஸ்ருதி ஹாசன் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். முதல் பாதியில் தான் ஸ்ருதியை அதிகம் பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களை புரிந்து நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரேயா ரெட்டி, ராமசந்திரா ராஜு, மது குருசாமி, ஜான் விஜய், மைம் கோபி ஆகியோரின் நடிப்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.
பவுன் கவுடாவின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளையும், பில்டப் காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் படமாக்கியிருக்கிறது. ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
கன்சார் நகரில் நடக்கும் சம்பவங்களும் கேஜிஎஃப் படத்தைப் பிரதிபலிப்பது படத்தின் மைனஸ் ஆனாலும் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்க வைக்கிறது சலார்.