நம்பர் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு விமர்சனம்
கால் பந்தாட்டத்தில் விளையாடும் அரசியலையும் ஏற்றத்தாழ்வுகளையும் விமர்சிக்கும் படைப்பாக இப்படம் வந்துள்ளது.
கதையில் உள்ள தீவிரம் படத்தில் இல்லை என்பது சோகம். பொதுவாகவே கால்பந்து விளையாட்டில் வர்க்கபேதம் நிச்சயம் தலை தூக்கும். இதிலும் அப்படித்தான். ஏழை குடும்பத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கால்பந்தாட்ட பயிற்சி எடுத்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து ஒரு கால்பந்தாட்ட குழுவை உருவாக்குகிறார் வாத்தியார் ஆன மதன் தட்சிணாமூர்த்தி. தன் மாணவர்களை மாநில அளவில் கால் பந்தாட்டத்தில் விளையாட விளையாட்டு அகாடமியில் வாய்ப்பு கேட்கிறார். இவர்கள் திறமையை பார்த்து வாய்ப்புத் தரும் அகாடமி தலைவரை அந்த ஊர் மேல் ஜாதியை சேர்ந்த ரவுடி மிரட்டி அவர்களை கால்பந்தாட்டம் விளையாட முடியாமல் தடுக்கிறார், இதனால் கோபம் கொண்ட வாலிபர் கூட்டம் ரவுடியின் தம்பியை கொலை செய்கிறார்கள். அதற்கு பழிவாங்க ரவுடி கும்பல் களமிறங்க பட்டியல் இன வாலிபர்களுக்கும் மேல் சாதி ரவுடிக்கும் நடக்கும் பழிவாங்கும் போராட்டமாக மாறுகிறது. இதைத்தாண்டி இந்த இளைஞர்களால் சாதிக்க முடிந்ததா என்பது மீதிக்கதை.
’தெரு நாய்கள்’, ‘கல்தா’, ‘வில்வித்தை’ என்று தனது ஒவ்வொரு படங்களிலும் சமூக பிரச்சனை பற்றி பேசும் இயக்குநர் ஹரி உத்ரா, இந்த முறையும் சமூக பிரச்சனையை கதையாக எடுத்துக்கொண்டு, அதை அனைத்து தரப்பினருக்குமான கமர்ஷியல் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம ஷரத், கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருப்பதோடு, எந்த இடத்திலும் தடுமாற்றம் இன்றி தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் நடித்து கவர்கிறார். கால்பந்தாட்ட போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடுபவர், தனது கனவு சிதைந்ததற்கு காரணமானவர்களை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போதும் அதே ஆக்ரோஷத்தோடு அமர்க்களப்படுத்துகிறார். காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கும் ஷரத், நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தன்னை நல்ல நடிகராக நிரூபிப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் அய்ராவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு பாடலில் வழக்கம் போல் தனது அழகான நடனத்தின் மூலமும், உடல் மொழி மூலமும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் மதன் தட்சிணாமூர்த்தி, வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் நரேன், கஞ்சா கருப்பு, இளையராஜா.எஸ், போலீஸாக நடித்திருக்கும் முத்து வீரா என மற்ற வேடங்களில் நடித்திருபவர்கள் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கால்பந்தாட்டகுழுவின் விளையாட்டில் தீவிரம் இல்லை.