மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி விமர்சனம்
அனுஷ்கா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்திருக்கும் படம். நவீன் படங்கள் ஐடியாவில் பின்னும், இந்தப்படம் எப்படி இருக்கிறது.
லண்டனில் பெரிய உணவகம் ஒன்றில் மாஸ்டர் செஃபாக இருக்கும் அன்விதா ஷெட்டிக்கு (அனுஷ்கா ஷெட்டி) அவர் அம்மா மட்டுமே துணை. அவரும் கேன்சரால் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். தனக்குப் பிறகு தன் மகளுக்கு துணை வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். ஆனால், தன் தாய்- தந்தையின் மணமுறிவால் காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் அனுஷ்கா. தாய் இறந்த பிறகு அவரது அன்பை தேடுபவர், தான் தாயாக வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதற்கு காதல், திருமணம் எதுவும் தேவையில்லை. தன் குழந்தைக்கு தகுதியான டோனர் கிடைத்தால் போதும் என நினைக்கிறார். இந்நிலையில், நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்கும் அனுஷ்கா தன் விஷயத்தை உடைத்து சொல்கிறார். . இறுதியில் அனுஷ்காவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு இடைவெளிக்குப் பிறகு திரையில் அனுஷ்கா.முதிர்ச்சியான வேடம், அதற்குப் பொருத்தமான பாவங்களை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார். நாயகன் நவீன்பொலிஷெட்டி, இளமையும் துடிப்பும் நிறைந்தவர். இந்தப்படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நகைச்சுவையாளர் கதாபாத்திரத்துக்கும் நியாயம் செய்திருக்கிறார்.தன்னைவிட மூத்தவரான அனுஷ்காவைக் காதலிப்பதை நடிப்பின் மூலம் எளிதாக்கியிருக்கிறார். அனுஷ்காவை வேறுவிதமாக அணுகத் தயாராகும் காட்சிகளில் சிரிப்பு மழை.
முரளிசர்மா, துளசி உள்ளிட்டோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ரதனின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசையிலும் குறைவைக்கவில்லை
காமெடி கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு. முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி இளைஞர்கள் ரசிக்கும் படி கலகலப்பாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
பல இடங்களில் லாஜிக் இல்லை என்றாலும், படத்தை பார்க்க வைத்து விடுகிறார்கள்.
நல்லதொரு ராம்-காம் ஃபீல் குட் படமாகவும் அனுஷ்காவுக்கு வலுவான கம்பேக்காகவும் அமைந்துள்ளது இந்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’.