Jawan Movie Review
ஜவான் எப்படி இருக்கிறது ?
பாலிவுட் சூப்பர்ஸ்டாரை வைத்து அட்லி இயக்கியிருக்கும் ஜவான். கமர்ஷியல் வெற்றிகளைத் தரும் அட்லி பாலிவுட்டில் ஜெயித்திருக்கிறாரா?
தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட மிலிட்டரி ஆபீஸர் அப்பா ஷாருக்கானுக்கு பிறக்கும் மகன் ஷாருக்கான், ஜெயிலில் பிறந்து வளர்கிறார். அந்த ஜெயிலிலேயே படித்து போலீசுக்கு தேர்வாகி பின்னாளில் அந்த ஜெயிலுக்கே ஜெயிலராகிறார். அந்த ஜெயிலில் இருந்து கொண்டே அங்குள்ள பெண் கைதிகளை வைத்துக் கொண்டு அவர் செய்யும் சாகசங்களும், அரசாங்கத்தை தட்டிக் கேட்கும் துணிச்சலுமே ஜவான் படத்தின் கதையாக விரிகிறது. இப்படி அவர் தட்டிக் கேட்கும் சமயத்தில் தன் அப்பாவுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர் எப்படி நியாயம் வாங்கித் தருகிறார் என்பதே ஜவான் படத்தின் மீதிக் கதை.
தமிழிலிருந்து ஹிந்திக்கு சென்ற அட்லி, அங்கு தன்னை நிரூபித்து தனித்தன்மையாகக் காட்ட என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில், அதை திறம்படச் செயல்படுத்தி எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து ஜவான் மூலம் பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்.
ஷாருக்கானின் நடிப்பை விட துடிப்பு படம் முழுவதும் பளிச்சிடுகிறது. வயதான கெட்டப்பிலேயே ஸ்மார்ட்டாக இருப்பவர், இளமை கெட்டப்பில் ஹாட்டாகவும் இருக்கிறார். அந்த அழகையும் மினுமினுப்பையும் இந்த வயதிலும் அவர் காப்பாற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம்.
அதனால் திருமணமாகாமல் இந்த வயதுக்குப் பெண் தேடுவதா? என்றெல்லாம் நம்மை யோசிக்க விடாமல் நயன்தாராவைப் பார்த்து அவரைத் திருமணம் செய்து கொள்வது இயல்பாகவே உள்ளது.
அரசாங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் இந்திய கோடீஸ்வரராக வரும் விஜய் சேதுபதியின் பாத்திரம் அவரது வழக்கப்படியே ஆர்ப்பாட்டம் இல்லாமல் பயமுறுத்துகிறது. ஆனால் இதைவிட எல்லாம் அவரிடம் நடிப்பை நாம் பார்த்துவிட்டதால் இந்தி ரசிகர்களுக்கு இவர் நடிப்பு புதியதாகத் தெரியலாம்.
அனிருத்தின் பி.ஜி.எம். படத்திற்கு பெரிய பலம். கவுரவத் தோற்றத்தில் வரும் தீபிகா படுகோன் அழகாக இருக்கிறார். தியேட்டரில் இருப்பவர்களை கவர்கிறார். ஆக்ஷன் காட்சிகளை விரும்புபவர்களுக்கு ஜவான் டபுள் ட்ரீட்.
முதல் பாதி பொல பின் பாதியிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.