‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “‘கொலை’ திரைப்படம் லாக்டவுனில் ஆரம்பித்து கடைசி வருடம் வெளியிட முடிவு செய்தோம். இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். ‘கொலை’க்கு பிறகு ‘இரத்தம்’ வரும். அதன் பிறகு ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரிவது எங்களுக்கு மகிழ்ச்சி. இயக்குநர் பாலாஜி குமார் மிகச்சிறந்த படமாக இதை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான மீடியம் பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை பெற்றது போல இந்த படமும் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி என நாயகிகள் இரண்டு பேருக்கும், படத்தின் தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி. ‘பிச்சைக்காரன் 2’ வெளியானதும் என்னுடைய படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும், சிறிது காத்திருங்கள் என்று விஜய் ஆண்டனி நம்பிக்கையாக சொன்னார். அவர் சொன்னது போலவே தற்பொழுது ‘கொலை’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. க்ரைம் திரில்லர் உடன் சேர்ந்து படத்தில் நிறைய எமோஷனலான விஷயங்களும் உள்ளது. படத்தின் நேரம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் தான். ஜூலை 21ஆம் தேதி படம் வெளியாகிறது. உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்”.

இசையமைப்பாளர் கிரீஷ் பேசியதாவது, “இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம். என்னுடைய திறமையான தொழில்நுட்பக்குழு அனைவருக்கும் நன்றி”.

ஒளிப்பதிவாளர் குமார் பேசியதாவது, “நான் முதலில் வேலை பார்த்த படக்குழுவுடன் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் வேலை பார்க்கிறேன். படத்தில் உள்ள ஏழு தயாரிப்பாளர்களும் ஒற்றுமையுடன் ஒரே சீராக பணி புரிந்துள்ளனர். அதனை இயக்குநர் பாலாஜி குமார், நடிகர் விஜய் ஆண்டனி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக கொண்டு சென்றுள்ளனர். படத்தை பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்”.

எடிட்டர் செல்வா, “இந்தப் படத்தில் நான் உள்ளே வர காரணமாக இருந்த இசையமைப்பாளர் கிரீஷ் மற்றும் சவுண்ட் டிசைனர் விஜய் ரத்தினம் இவர்களுக்கு நன்றி. விஜய் ஆண்டனி சாரின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பிடித்துள்ளது. உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் சசி, “பாலாஜி ஒரு திறமையான இயக்குநர். டிரெய்லர் சிறப்பாக வந்துள்ளது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியின் கரியரில் இது முக்கியமான படமாக அமையும்”.

இயக்குநர் விஜய் மில்டன், “இது என்னுடைய படம் போன்ற ஒரு உணர்வு உள்ளது. படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்”.

கலைப்புலி தாணு பேசியதாவது, “சிறப்பான சூழலாக இன்று அமைந்துள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பம் என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. இது ‘கொலை’ அல்ல; கலை. அனைவருக்கும் வாழ்த்துகள்”.

சத்யதோதி தியாகராஜன், “சஸ்பென்ஸ் திரில்லர் வகைகளில் இது வித்தியாசமானதாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழ்த்துகள்”.

தயாரிப்பாளர் முரளி. ”விஜய் ஆண்டனி எனக்கு சகோதரன் போன்றவர். மிகக் கடினமான உழைப்பாளி. அதனால்தான் இந்த வெற்றி அவருக்கு கை கூடியுள்ளது. அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு ஜானரை முயற்சி செய்து வருகிறார். படத்திற்கு வாழ்த்துகள்”

அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியதாவது, “இது ஒரு தப்பான ‘கொலை’ அல்ல; சரியான ‘கொலை’. தயாரிப்பாளராக தனஞ்செயனுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும். சின்ன கம்ப்ளையிண்ட் கூட இல்லாமல் படம் முடித்து கொடுத்தவர் இயக்குநர் பாலாஜி குமார். அவர் ஜெயிக்க வேண்டும். விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத சகாப்தமாக இருப்பார். இந்த ‘கொலை’யில் நியாயம் இருக்கும்”.

இயக்குநர் விஜய், “படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு நானும் ரசிகர்கள் போல காத்திருக்கிறேன். வாழ்த்துகள்”

இயக்குநர் லிங்குசாமி, “விஜய் ஆண்டனியுடன் எனக்கு நேரடியாக பழக்கமில்லை. ஆனால், விஜய் மில்டனும், சசியும் அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளனர். இசையமைப்பாளராக ஆரம்பித்து இப்போது இயக்குநராக நம்பிக்கையோடு வளர்ந்துள்ளார். அவரது நம்பிக்கைக்கு படம் நிச்சயம் வெற்றிப் பெறும்”.

இதில் நடிகர் மிஷ்கின் பேசியதாவது, “’கொலை’ படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே அடுத்து என்ன சார் கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள். ‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக (Font) இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார். ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் ஃபாண்ட் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான். ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்? அப்படி ஒரு இடத்திற்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளான் என்று அர்த்தம். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என்னிடம் ஜாலியான ரெமாண்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போர். ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்மமுடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக உள்ளது. அதை விசாரித்து இயக்குநர் ஒரு சிறந்த படமாக தரும்போது அது வெற்றிப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை”.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்தி பேசியதாவது, “’போர்தொழில்’ படத்திற்கு பிறகு இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என பலரும் நம்பிக்கைக் கொடுத்தனர். இந்தப் படத்திற்காக கடின உழைப்பை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரபிரதேசத்தில் பிசினஸ் பாருங்கள் என்று என்மீது நம்பிக்கையாகக் கொடுத்தர் விஜய் ஆண்டனி. அவருக்கு நன்றி”.

நடிகர் ஜான் விஜய், “மிஷ்கின் சொன்னது போல, படத்திற்காக படக்குழு எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார்கள் என்பது தெரிகிறது. இந்தப் படத்தில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நீங்கள் கொடுக்கும் விலைக்கு ‘கொலை’ மதிப்பானது”.

நடிகை மீனாட்சி செளத்ரி பேசியதாவது, “தமிழில் இது எனக்கு முதல் படம் என்பதில் மகிழ்ச்சி. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் என அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு எனக்கு கொடுத்தனர். இந்தப் படம் பாசிட்டிவான கற்றுக் கொள்ளும் அனுபவமாக அமைந்தது. தியேட்டரில் வந்து அனைவரும் படம் பாருங்கள்”.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “’கொலை’ படம் போலவே நல்ல கண்டெட்டுடன் நிகழ்ச்சி நடந்து வருகிறது. எடிட்டர், படத்தொகுப்பு, இசை என அனைத்து தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர். இயக்குநர் பாலாஜி நிறைய ஹாலிவுட் படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் அவர். இந்தப் படத்தின் கதாநாயகி மீனாட்சி செளத்ரி தமிழ் தெரியாமல் கூட பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்துள்ளார். மிஷ்கின் சாருடைய பேச்சு கொலை செய்ய வேண்டும் என்று தோன்றுமளவுக்கு சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியை போலவே படமும் சிறப்பாக வந்துள்ளது”.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *