‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநரும், ‘லாபம்’ படத்தின் தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்சன் என கமர்சியல் அம்சங்களுடன் முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
மலேசியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் கோலாகலமாக தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதனை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.