தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !!

0

கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ் குமார் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் இணைந்துள்ளார்.

சென்னை (டிசம்பர் 08, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய விருது நாயகன் நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம்,  அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி, இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் இளைஞர்களின் கனவு நாயகி நடிகை பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் Dr.சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. அவரது வருகை படத்தின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் தனுஷ், Dr.சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், “மேற்குத் தொடர்ச்சி மலை” ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்),  நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

“கேப்டன் மில்லர்”  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுக்களை குவித்த “ராக்கி, சாணிகாயிதம்” படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here