‘பொன்னியின் செல்வன்’ நன்றி தெரிவிக்கும் விழா

‘பொன்னியின் செல்வன்’ நன்றி தெரிவிக்கும் விழா

ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், ” பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து, கைவிட்டார்கள். அதனை கையில் எடுத்து இந்த படத்தை உருவாக முக்கிய காரணமாக இருந்த லைகா குழும தலைவர், எங்கள் அண்ணன் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தினமும் இது குறித்த தகவல்களை ஆர்வமுடன் கேட்டறிவார். அவருக்கு நூற்றுக்கணக்கான தொழில்களும், வணிகமும் இருந்தாலும், திரைப்படத் தயாரிப்பில் வேறு படங்களைத் தயாரித்து வந்தாலும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மீது மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். ‘பொன்னியின் செல்வன்’ படம் தயாரானவுடன், நானும் சுபாஸ்கரன் அண்ணனும் படத்தை பார்த்தோம். ‘இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும்’ என்றும், ‘இந்த திரைப்படம் வேற லெவலில் ரீச் ஆகும்’ என்றும் முழு நம்பிக்கையுடன் பேசினார். இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் இந்த திரைப்படத்தை நாங்கள் சொந்தமாக வெளியிட்டோம். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குநர் மணிரத்னம் தான். அவர் இல்லையென்றால் இது போன்ற  படைப்பை வழங்கி இருக்க இயலாது. இது எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது. இத்தனை பெரிய வெற்றியை சாத்தியப்படுத்திய பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடத்தில் ஏற்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு தங்களது நிறுவனத்தின் சொந்த படைப்பாக கருதி விளம்பரத்தில் பங்களிப்பு செய்த சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், எங்களது நிறுவனத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படத்தில் சரித்திர காலகட்ட நாயகர்களாகவே தோன்றிய நடிகர்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன் ஆகியோருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ” நல்ல படைப்பை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. தமிழ் ஊடகங்கள் மட்டுமில்லாமல்.. இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாமல்.. சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் பொன்னியின் செல்வன் படைப்பை கொண்டாடுகிறார்கள். இன்று உலகம் டிஜிட்டல் மயமான பிறகு அனைத்தும் எளிதாக இருக்கிறது. நட்சத்திரங்களைப் பற்றி ஊடகங்கள் சொல்லும் விசயங்கள்.. எங்களை விரைவாகவும், எளிதாகவும் வந்தடைகிறது. உலகம் முழுவதும் அனைவரும் இந்த படைப்பை விமர்சனம் செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் மணி சார் தான். அவர் நாற்பது வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒப்பற்ற படைப்பை வழங்கி கலை சேவை செய்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று துல்லியமாக தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மணி சார் மற்றும் சுபாஸ்கரன் சார் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த வெற்றியைக் கடந்த வாழ்த்துக்கள்.

இந்த தருணத்தில் நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை அளித்துவிட்டு, இயக்குநர் மணிரத்னம் அமைதியே உருவமாக அமர்ந்திருக்கிறார். இவரை நாம் கொண்டாட வேண்டும். அவரின் கண் முன்னால், அவரை வைத்துக் கொண்டு அனைவரும் பேச வேண்டும். அவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம். அவரை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும். ” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், ” பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. மேக்கப் போட்ட பிறகு முதல் காட்சி கோயில் ஒன்றில் எடுக்கப்பட்டது முதல் அனைத்து அனுபவமும் மனதில் மறையாமல் இருக்கிறது. அனைவரும் இணைந்து குடும்பம் போல் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது புதிது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் என அனைவரும்  ஒரு குடும்பமாக பணியாற்றியதும் மறக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு மன நிறைவை அளித்திருக்கிறது.

இதைவிட பொன்னியின் செல்வன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக குழுவாக ஒவ்வொரு இடத்திற்கும் பயணித்த அனுபவமும் புதிது. இது தமிழ் சினிமாவின் படமல்ல. தமிழ்நாட்டின் படம்.  இது ஒரு முக்கியமான பதிவு. இதை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சென்று, அறிமுகப்படுத்தி இருக்கிறோம். தற்போது பான் இந்தியா சீசன் என்பதால், இந்த படத்தைப் பற்றி தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய இந்திய மொழிகள் பேசும் மக்களிடத்திலும் சென்று அறிமுகப்படுத்தினோம். ஏனெனில் நம்மிடம் இவ்வளவு அழுத்தமான கதையம்சம் கொண்ட படைப்பு இருக்கிறது. இதனை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லும் போது தன்னம்பிக்கையும் இருந்தது. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இப்படத்தை பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது. இந்த தருணத்தில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவில் இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் இடம்பெற்ற சிறிய சிறிய விசயங்களை கூட நுட்பமாக விவரித்து பாராட்டி எழுதி இருந்தனர். இதையெல்லாம் வாசிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் மக்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது உண்மையில் சந்தோஷமாக இருந்தது.

பொன்னியின் செல்வன் நாவலை வாசித்து விட்டு, அதனை படமாக திரையரங்குகளில் பார்க்கும்போது மாயாஜாலம் நடத்திய மணி சாருக்கு நன்றி. லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் ஆண்டு கணக்கில் ஊறப் போட்டிருந்த கதாபாத்திரங்களையும், கதையையும்  திரையில் கொண்டு வருவது எளிதல்ல. இந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்று யாரும் மணிரத்னத்தை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மணி சார் தான், நான் கூடுதல் சுமையை தூக்குவேன். இதனை தூக்குவதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன் என்று சொல்லி, பொறுப்பை உணர்ந்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து வழிநடத்தி,, உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை வழங்கியதற்கும் நெஞ்சார்ந்த நன்றி. ” என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில், ” ஜெயம் ரவி மற்றும் கார்த்தி சொன்ன விசயத்தை நான் வழிமொழிகிறேன்.  பொன்னியின் செல்வன் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. பத்திரிகைகளும், ஊடகங்களும் இப்படத்தின் தொடக்கத்திலிருந்து பெரும் பாலமாக இருந்துள்ளீர்கள். வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத வகையில், இந்தப் படத்தின் படத்தைப் பற்றிய விமர்சனத்திற்காக ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதள பக்கத்தையும் பார்வையிட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு புதுவிசயத்தை பதிவிட்டிருந்தார்கள். இது எனக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. ‘பொன்னியின் செல்வன் பிரமிப்பிலிருந்து வெளியே வந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள்’ என்று என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் செல்லமாக கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கி இருந்தேன்.

இந்த நாவலை வாசித்து பல ஆண்டுகளாக அந்த கதாபாத்திரங்களைப் பற்றி தங்களது மனதிற்குள் ஒவ்வொரு வகையில் வரைந்து வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன்.. என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், ஒரு கற்பனை இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு முகமும் இருந்திருக்கும். அந்த முகங்கள் அனைத்தும் தற்போது எங்களின் முகமாக மாறிவிட்டது. தற்போது அந்த கதாபாத்திரங்களை பற்றி எண்ணும்போது, எங்களது முகம் உங்களது நினைவிற்கு வருகிறது. இதற்காக படைப்பாளி மணிரத்னத்திற்கு எங்களின் தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர்களான நாங்கள், எத்தனையோ வேடத்தில் தோன்றியிருக்கிறோம். ஆனால் வாசகர்களின் கற்பனையில் நீண்டகாலமாக இருந்த ஒரு முகமாக நாங்கள் மாற்றம் பெற்றிருப்பது என்பது புதிது.. நடிகர்களுக்கு எப்போதும் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதனை இந்தப் படத்தின் மூலம் எளிதாக சென்றடைந்திருக்கிறோம் என எண்ணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. சரித்திர கதைகளில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மீது ரசிகர்கள் காட்டும் அன்பு, இன்று எங்களை வந்தடைந்திருக்கிறது. இதற்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது.

நாற்பது ஆண்டுகளாக திரையரங்கத்திற்கே செல்லாதவர்கள், இந்த படத்திற்காக மீண்டும் திரையரங்கத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள் எனும் போது மகிழ்ச்சி மேலும் இரு மடங்காகிறது இந்தப் படத்தை பார்த்த இளைய தலைமுறையினர் பலரும், ‘இந்த படத்தை பார்த்து விட்டோம். இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் மீண்டும் ஒரு முறை  படிக்க வேண்டும்’ என்பார்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எல்லோரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள், இது மிகப் பெரிய விசயம். இதற்கான எல்லாப் புகழும் இயக்குநர் மணிரத்னத்திற்கும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் தான் சேரும்.” என்றார்.

இயக்குநர் மணிரத்தினம் பேசுகையில், ” எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சுபாஸ்கரன் அவர்களை சந்தித்து, ‘பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். ரெண்டே நிமிடத்தில் சரி என்று சொல்லிவிட்டார். அவர் இல்லையென்று சொன்னால், இந்த படைப்பு உருவாகி இருக்காது. அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒரு குடும்பமாக தங்களின் ஒத்துழைப்பை அளித்தனர். அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றால் இது நடைபெற்றிருக்காது. அதுவும் கொரோனா காலகட்டத்தில், உடல் எடையை அதிகரித்துக் கொள்ளாமல், சீராக பேணி பராமரித்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க இயலாது. இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியில் வந்து பார்க்கும்போதுதான் எத்தனை பேர் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிந்தது. சில தருணங்களில் இதுவே எனக்கு பயத்தையும் தந்தது. ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது, அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக் கொள்வேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் பேசுகையில், ”  இதுபோன்ற பிரம்மாண்டமான படைப்பை தயாரிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக முதலில் மணிரத்தினத்திற்கு நன்றி. மணிரத்தினம் ஒரு லெஜன்ட். நான் சிறிய வயதில் மணிரத்னம் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ படத்தை பார்த்திருக்கிறேன். இன்று வரை அவர்கள் இருவரும் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை நேர்த்தியாக கையாண்டார். இந்தப் படத்திற்காக பணியாற்றிய ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சீயான் விக்ரம் உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் லைகா குழுமத்தின் சார்பாக நன்றியை பதிவு செய்து கொள்கிறேன் என்றார்.

இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய அமரர் கல்கியை போற்றும் வகையில், அவரது பெயரில் செயல்படும் அறக்கட்டைளைக்கு லைகா நிறவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதனை லைகா குழும அதிபர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் சென்னையிலுள்ள அமரர் கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரனின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான திருமதி சீதாரவியிடம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *