‘ஆதார்’ படத்தின் விமர்சனங்களை தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம் -இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேச்சு

‘ஆதார்’ படத்தின் விமர்சனங்களை தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம் -இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேச்சு

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.

‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை தமிழக முழுவதும் வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், ” ‘ஆதார்’ படத்தினை இயக்கும் வாய்ப்பளித்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான சசிகுமார் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஆதார்’ படத்தை பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான அனைத்து விமர்சனங்களையும் வாசித்தேன். பார்த்தேன். பிரமித்தேன். இதன் காரணமாக எழுந்த உந்துதலால் நன்றி அறிவிக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.

திரைக்கதை எழுதும் போது எத்தகைய உணர்வுடன் எழுதினேனோ… அது துல்லியமாக விமர்சனத்தில் இடம்பெற்றிருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படைப்பாளிகளான நாங்கள் சில ஆண்டுகள் உழைத்து திரைக்கதை எழுதி, அதனை படைப்பாக வெளியிடுகிறோம். அதனை இரண்டு மணி நேரம் மட்டுமே பார்த்துவிட்டு, எப்படி இவ்வளவு துல்லியமாக விமர்சிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் என்னுள் இன்னும் இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களான திரை விமர்சகர்கள் தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு அல்லது நான்கு திரைப்படங்களை கூட பார்க்கிறீர்கள். அந்த நெருக்கடியான காலகட்டத்திலும், ‘ஆதார்’ போன்ற திரைப்படத்தின் உள்ளடக்கத்தை உட் கிரகித்து, அதனை நேர்மறையாகவும், விரிவாகவும், விவரிக்க முடிகிறது என்றால்.. உங்களுடைய எழுத்தை கண்டு எனக்குள் மிரட்சி ஏற்பட்டது. குறிப்பாக இப்படத்தின் திரைக்கதைக்குள் மறைமுகமாக இடம்பெறும் ரவி என்னும் கதாபாத்திரம், யூசுப் பாய் எனும் அருண் பாண்டியனிடம் முதல் பாதியில் ஒரு காட்சியும், இரண்டாவது பாதியில் ஒரு காட்சியும் மட்டுமே இடம்பெற்றிருக்கும். உச்சகட்ட காட்சியில் அந்த கதாபாத்திரத்திற்குரிய வசனங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். திரைக்கதைக்கு வலுவாக அமைந்திருக்கும் இந்த கதாபாத்திரங்களையும், விமர்சனத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்ததை பார்த்து வியந்தேன். பெருமிதமாகவும் இருந்தது.

ஏனைய திரைப்படங்களின் விமர்சனத்தை போல் அல்லாமல், ‘ஆதார்’ திரைப்படத்திற்கான விமர்சனங்கள் நன்றாக இருந்தன. இதனை தொகுத்து ஆல்பமாக வெளியிடலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் ‘ஆதார்’ திரைப்படத்தின் விமர்சனத்தில் இருக்கும் துல்லியமான விவரங்கள் இதற்கு முன் எந்த திரைப்படத்தின் விமர்சனத்திலும் இடம்பெறவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளரிடமும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களுக்கும் இது போன்ற விமர்சனங்கள் வந்ததில்லை.

கடந்த 22 ஆண்டு கால திரையுலக பயணத்தில், உங்களுடைய விமர்சனமும், ஆதரவும், அன்பும் என்னை படைப்பாளியாக வளர்த்துக் கொண்டு வருகிறது. என்னுடைய ஐந்தாண்டு கால உழைப்பை ‘ஆதார்’ படத்தில் முதலீடு செய்திருக்கிறேன். இதனால் சிறிய அச்சமும் என்னுள் இருந்தது. படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள், இது தரமான படைப்பு என அதன் தனித்துவத்தை அடையாளப்படுத்தி பாராட்டி, என்னை அடுத்த கட்ட இலக்கை நோக்கி பயணிக்க வைத்திருக்கிறார்கள்.

‘ஆதார்’ திரைப்படத்தின் உள்ளடக்கம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படக்கூடியத் தகுதி கொண்டது என்று கணித்து, அதனை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு உதவி செய்ததுடன், எட்டிற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றதற்கு பங்களிப்பு செய்த அதன் ஒருங்கிணைப்பாளர் திவ்யா அவர்களுக்கும், படத்தின் வெற்றிக்கு தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இதனிடையே ‘ஆதார்’ படத்தின் வெற்றியைப் பாராட்டி, அப்படத்தின் இயக்குநரான ராம்நாத் பழனிக்குமாருக்கு, தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *