தீபிகா படுகோனையே கவர்ந்த ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த சந்தோஷி
தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி’ சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார்.
அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம். இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து `PLUSH Boutique & Beauty Lounge’ கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் கூட பலரும் சந்தோஷியிடம் பயிற்சிக்கு வருகின்றனர்.
இந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை நேற்று (நவ-17) சென்னையில் பிரபலமான ஐடிசி சோழா ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தியுள்ளார் சந்தோஷி.. இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னித்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின்போது இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களின் பேஷன் வாக் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களையும் அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.
சந்தோஷி பேசும்போது, “கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்ததுடன் பல சீரியல்களிலும் நடித்தேன்.. சினிமா, சீரியல் இவற்றைத் தாண்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவில் பொட்டிக், பெண்களுக்கான சலூன், கல்யாண பெண்களுக்கான மேக்கப், அவர்களுக்கான உடை, வெட்டிங் போட்டோகிராபி என ஒரு சிறிய கடையாக ஆரம்பித்து இன்று ஆழ்வார்திருநகர், வடபழனி, மதுரை கேகே நகர் என மூன்று கிளைகளை உருவாக்கியுள்ளேன்.
இந்த ஏழு வருடங்களில் செமினார் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் அப்படி செய்தால் ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்தேன்.. அது நிறைவேறிய நாள் இன்றுதான்.. இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்த எனக்கு கைகொடுத்து உறுதுணையாக இருந்தவர் நடிகை நமீதா தான்.. இப்படி ஒரு செமினார் நடத்தப்போவதாக கூறியதும் எங்களுடைய உடைகள், ஆபரணங்கள் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை அணிந்து அவற்றை பிரபலப்படுத்த தயாராக முன்வந்தார்..
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களது மேக்கப் செமினாருக்கு ஒத்துழைத்த லட்சுமி அகர்வால், டெல்லியிலிருந்து இதற்காகவே வந்துள்ளார். அவருக்கும் எனக்கும் முன்பின் தொடர்பு கிடையாது. இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் அவரை தொடர்பு கொண்டேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு, இதில் என்னுடைய மேக்கப் கலையின் திறமையை காட்டுவதற்கு லட்சுமி அகர்வால் ஒரு பொருத்தமான நபராக இருப்பார் என அவரை அழைத்தேன்.. அவரும் ஒப்புக்கொண்டு இங்கே வருகை தந்திருக்கிறார்.
இவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள்.. விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது.. அவருக்கு இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா அதற்கு அனுமதி இருக்கிறதா என்பது கூட எங்களுக்கு தெரியாது.. ஆனாலும் என் அழைப்பை ஏற்று அவர் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொண்டுள்ளார்.. இவர்கள் தவிர இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்ற அனைவருக்கும் நன்றி” என கூறினார் சந்தோஷி..
ரக்சிதா தினேஷ் பேசும்போது, “8 வருடத்திற்கு மேலாக சந்தோஷியுடன் எனது நட்பு தொடர்கிறது.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தோஷி மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் தான் காரணம்.. இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது” என்றார்
சின்னத்திரை சீரியலில் ரோஜாவாக வலம்வரும் பிரியங்கா பேசும்போது, ‘தமிழில் முதன்முறையாக நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் ஒப்பனை நிகழ்வில் பொறுமையாக கலந்துகொண்ட, சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ரம்யா பேசும்போது, ‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்போவதாக சந்தோஷி என்னிடம் கூறி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டால் உங்களைப் பார்த்து பலருக்கு உற்சாக தூண்டல் ஏற்படும் என்று கூறினார்.. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.. என்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. என்னை இன்னும் அழகாக மாற்றியிருக்கிறார் சந்தோஷி” என்றார்.
லட்சுமி அகர்வால் பேசும்போது, “இங்கு யாரையும் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு, பாதிக்கப்பட்டவர்களாக பரிதாபப்படுவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.. 2005ல் என் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடைபெற்றது.. இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பிறந்து வாழ்வது தான் மிகப்பெரிய கஷ்டம்.. அதிலும் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வாழ்வது என்பது கடினமான ஒன்று..
2009 வரை முகத்தை மறைத்தபடி தான் எங்கும் சென்று வந்தேன் ..ஆனால் அதன் பிறகுதான் நான் ஒன்றும் கிரிமினல் இல்லையே எதற்காக முகத்தை மூடி மறைக்க வேண்டும்.. யாருக்கெல்லாம் என்னைப் பார்த்து அசிங்கமாக தோன்றுகிறதோ முதலில் அவர்கள்தான் தங்களைப் பார்த்து அசிங்கப்பட்டுக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன். ஆசிட் வீச்சால் தாக்குதலுக்கு ஆளானது ஒருமுறைதான்.. ஆனால் இந்த சமூகத்தில் அதை சுட்டிக்காட்டியே பலமுறை நான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்..
ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து அதிலிருந்து வெளியே வந்து உங்கள் முன் தைரியமான ஒரு பெண்ணாக நான் நின்று கொண்டிருக்கிறேன்.. மேக்கப் என்பது ஒரு பெண்ணுக்கு அழகு தான் என்றாலும் மனசு அழகாக இருந்தால் முகத்தில் அது தானாக தெரியும்.. அதனால் நான் எப்போதும் இந்த அழகாகவே உணர்கிறேன்” என்று கூறினார்
நடிகை நமீதா பேசும்போது, ‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இதுபோன்று முயற்சி.. இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல.. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட. அந்தவகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்..
பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. பெண்கள் வாழப் பிறந்தவர்கள்.. வீராங்கனைகள்.. இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது.. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள்.. வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள்.. அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..
நான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக்கிறேன்.. ஆனால் அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இன்று தான் உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.