எல்லா நாட்டிலும் ஆள்வதற்கு ஒரு ராஜா இருப்பார். ஆனால், பாடல் என்று வரும்போது ஆள்வதற்கு ஒரே ராஜா தான். அது ‘இசைஞானி’ இளையராஜா தான்.
அவரின் இசை இல்லையென்றால், நீண்ட தூர பயணம் என்றோ அழிந்திருக்கும். ஒரு கார் டிரைவர் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு முன் இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார். காஷ்மீர் வரைக்கும் என்றால் கூட அவருடைய பாடல்கள் தான் பயணத்தை இனிமையாக்கும்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘இளையராஜா 75’ விழாவை நடத்துவதில் பெருமை மட்டுமல்ல, கடமைப்பட்டிருக்கிறோம்.
இளையராஜா போன்ற ஒரு மாமேதை பிறக்கவும் முடியாது, இப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கவும் முடியாது. தந்தைக்காக மகன் கணக்கில்லாமல் செலவு செய்வது தப்பில்லை. அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தப்பு என்று சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், தந்தைக்கு செய்வது கடமை. அதுபோல், இளையராஜாவிற்காக இந்த விழா நடத்துவதில் எந்த தப்புமில்லை.
‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெரும் வசனம் தான் தோன்றுகிறது. ‘சில பேர் பாராட்டியே பேர் வாங்குவார்கள், சிலர் குற்றம் கண்டுபிடுத்தே பேர் வாங்குவார்கள்’ என்ற வசனத்திற்கேற்ப நாங்கள் இளையராஜாவை பாராட்டி வரலாற்றில் இடம்பெறுவோம். அதேபோல், இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று எதிர்த்தவர்களும் இடம்பெறுவார்கள்.
இதெல்லாம் நடக்குமென்று தெரிந்து தான் அன்றே இளையராஜா இசையமைத்திருக்கிறார் ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா’ என்று. இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே மாணிக்கமாக விளங்குபவர் இளையராஜா. நீங்கள் இந்த இரண்டு நாளும் ஒரு சிறந்த இசை விருந்தை சுவைக்கப் போகிறீர்கள்.
இந்நிகழ்ச்சிக்கு இறுதுணையாக இருக்கும் சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி. எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திரு. பன்வாரிலால் புரோஹித் மிகச் சிறந்தவர். அவரைப் பற்றி தவறான வதந்திகளை செய்திதாள்களில் படிக்கிறோம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடமைகளைத் தவறாமல் செய்து வருகிறார். அவர் எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். இவ்விழாவிற்கு வருகை தந்து, விழாவை துவக்கி வைத்த ஆளுநருக்கு நன்றி.
வெளியூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரின் மனதிலும் இந்த இரண்டு நாள் விழா நீங்கா இடம் பெரும்.